கல்வி கடன் வழங்க லஞ்சம் பெற்ற வங்கி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி நாசரேத் கனரா வங்கி கிளையில் முதுநிலை மேலாளராகப் பணிபுரிந்தவர் சாமுவேல் ஜெபராஜ். இதே வங்கியில் தற்காலிகப் பணியாளராக பணிபுரிந்தவர் நாராயணன் (63). இப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகள் நர்சிங் படிப்பில் சேர கல்விக் கடன் கேட்டு 2010-ல் விண்ணப்பித்தார். கல்வி கடனுக்கான வரைவு காசோலை வழங்க சாமுவேல் ஜெபராஜ், நாராயணன் ஆகியோர் ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளனர். இது தொடர்பான புகாரின்பேரில், சிபிஐ வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தது.
இந்த வழக்கை மதுரை சிபிஐ நீதிமன்றம் விசாரித்து, கடந்த 24.10.2018-ல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக் கோரி, சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு நிலுவையில் இருந்தபோது சாமுவேல் ஜெபராஜ் இறந்தார்.
இந்த வழக்கை விசாரித்து நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: ஏழை மாணவர்களின் சமூக நீதிக்காக அரசு கல்விக் கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தின் கீழ் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயில வங்கிகள் கடன் வழங்குகின்றன. இந்த திட்டத்தில் மோசடி செய்வது, லஞ்சம் பெறுவது கண்டனத்துக்குரியது.
செல்வாக்கானவர்களின் குற்றங்களுக்கு உரிய தண்டனை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என, முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் மாணவிக்கு ரூ.62,500 கல்விக் கடன் வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கியுள்ளனர். இதனால், நாராயணனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படுகிறது. இவருக்கு 3 பிரிவுகளில் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையிலிருந்து இந்த வங்கியில் கல்விக் கடன் கேட்ட 2 மாணவிகளுக்கு தலா ரூ.35 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.