அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் 3 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தார். தனியார் தொலைக்காட்சி சேனல் மற்றும் தனியார் செய்தி நிறுவனத்துக்கு துளசி கப்பார்ட் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் அடிப்படைவாத தீவிரவாதம் தலைதூக்குவது கவலை அளிக்கிறது. குறிப்பிட்ட மதத்தை முன்னிறுத்தி செல்படும் தீவிரவாதிகள், பிற மதங்களை சேர்ந்தவர்களை கொடூரமாக கொலை செய்கின்றனர். இதுபோன்ற அடிப்படைவாத தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதிபட தெரிவித்திருக்கிறார்.
நான் சிறு வயது முதலே பகவத் கீதையை படித்து வருகிறேன். எனது கடினமான காலங்களில் பகவத் கீதையே என்னை வழிநடத்துகிறது. இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் போர் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் வழங்கிய உபதேசங்களை நினைவுகூர்கிறேன். கிருஷ்ணரின் உபதேசங்களைபின்பற்றினால் மோசமான சூழலையும், சாதகமான சூழலாக மாற்ற முடியும். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பு நடைமுறையை அமல்படுத்தி உள்ளார். இதுகுறித்து அமெரிக்காவும் இந்தியாவும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதிபர் ட்ரம்புக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே ஆழமான நட்புறவு நீடிக்கிறது. இதன்மூலம் இரு நாடுகள் இடையே பொருளாதார, பாதுகாப்பு உறவு மேலும் வலுவடையும். இவ்வாறு துளசி கப்பார்ட் தெரிவித்தார்.