இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதை நெருங்கி விட்டேன்.. ஆனால்.. – கருண் நாயர்

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க கருண் நாயர் கடுமையாக போராடி வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இருப்பினும் அதற்கடுத்த போட்டிகளில் சொதப்பியதால் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். அதன் பின் அணியில் இடம் கிடைக்க போராடி வருகிறார்.

தற்போது உள்ளூர் தொடர்களில் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்து வரும் அவர், மீண்டும் தேர்வுக்குழுவின் கவனத்தை தன் பக்கம் மீது ஈர்த்துள்ளார். குறிப்பாக விஜய் ஹசாரே கோப்பையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், அந்த தொடரில் மட்டும் 7 போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் உட்பட 752 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இருப்பினும், ஏற்கனவே நன்றாக விளையாடி 40க்கும் மேற்பட்ட சராசரியை கொண்டுள்ள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு (கருண் நாயர்) வாய்ப்பு இல்லை என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்தார்.

இதே போல் ரஞ்சி கிரிக்கெட்டில் விதர்பா அணி பட்டம் வெல்ல முக்கிய பங்கு வகித்த அவர் 4 சதம் 860 ரன்கள் எடுத்தார். இதனால் அவருக்கு மறுபடியும் இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர். இதனால் எதிர் வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு இடம் கிடைக்கலாம் என்று செய்திகள் காணப்படுகின்றன.

தற்போது எதிர் வரும் ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் கருண் நாயர் அதற்காக தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணிக்கு திரும்புவதை நெருங்கி விட்டதாக கருண் நாயர் தெரிவித்துள்ளார். ஆனால் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறேன் என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவதற்கான வாய்ப்பை நெருங்கி விட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. அது மனதின் பின்புறத்தில் உள்ளது. இப்போது என்னுடைய ஒரே கவனம் நன்றாக தயாராகி, ஐ.பி.எல்.-ல் நான் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு, ஒவ்வொரு ஆட்டத்திலும் அணிக்கு பங்களிப்பதுதான்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.