அதிமுகவை உடைக்க முடியாது. நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். பிரிக்க முயற்சி செய்தால், அவர்கள் தான் மூக்கு உடைந்து போவார்கள் என அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் விவகாரத்தில், எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை நீக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அதன்பேரில் இன்றைக்கு சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “எதிர்கட்சித் தலைவர் ஆளுநர் உரையில் 2.52 மணி நேரம் பேசினார். அவர்கள் பேசுவதற்கு எந்த தடையுமில்லை.” என்று குறிப்பிட்டார். இதில் ஒரு மணி நேரம் ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் மட்டுமே பேசினர்.
மீதமுள்ள 1.52 மணி நேரம் எனது உரையில், 46 நிமிடங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதிலும் 44 நிமிடங்கள் முதல்வரும், அமைச்சர்களும் மட்டுமே மாறி மாறி பேசியிருக்கின்றனர். நான் பேசியது வெறும் 2 நிமிடங்கள் மட்டும் தான் இருக்கிறது. பேரவை தலைவர் எப்படி ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார் என்பதற்கு இதுவே உதாரணம். ஒரு சட்டப்பேரவை தலைவர் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று பாகுபாடு பார்க்காமல், இரண்டு தரப்புக்கும் சமமாக நடப்பது தான் அழகு. நடுநிலையோடு அவர் நடந்து கொள்ள வேண்டும்.
ஆனால் இன்றைக்கும் கூட மூத்த அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி, கருமேனி நம்பியாறு திட்டத்தை பற்றி அவர் பேசிக்கொண்டிருக்கும் போது சட்டப்பேரவை தலைவரே அதற்கு பதிலளிக்கிறார். அமைச்சர் பதில் சொன்னால் பரவாயில்லை. நீங்களே பதில் சொன்னால் எப்படி? என்று கேட்டால், நான் அந்த தொகுதியை சேர்ந்தவன் அதனால் பதிலளிக்கிறேன் என்கிறார். சட்டப்பேரவை தலைவர் பொறுப்பில் அமர்ந்து கொண்டு, ஒரு எதிர்கட்சி உறுப்பினர் பேசும்போது அதை மறுத்து பேசுவது என்பது ஏற்புடையதல்ல. இவ்விவகாரத்தில் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.
தமிழகத்தில் கடந்த 73 ஆண்டுகளாக பல்வேறு கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்தபோதிலும் 2021-ம் ஆண்டு வரை மொத்த கடன் 5.18 லட்சம் கோடி தான். ஆனால் அதன் பிறகு 4 ஆண்டுகளில் மட்டும் 4.5 லட்சம் கோடி கடனை தமிழக அரசு வாங்கியிருக்கிறது. ஆனால் 93 சதவீதமாக கடனை குறைத்திருப்பதாக திமுகவிடன் நாடகமாடுகின்றனர். இதெல்லாம் மக்களை ஏமாற்றும் செயலாகும். டாஸ்மாக் துறையில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சோதனையில் வெளிவந்திருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு டாஸ்மாக் துறையில் முறைகேடு நடந்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த விவரங்கள் முழுமையாக கிடைத்தவுடன் ஆதாரங்களை வெளிப்படுத்துவோம். இவர்களுக்கு பயமில்லை என்றால் ஏன் அமலாக்கத்துறையை கண்டு பயப்படவேண்டும். நீதிமன்றத்துக்கு சென்று வழக்கை சந்திக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பு சொல்லட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆலோசனை கூட்டங்களை செங்கோட்டையன் புறக்கணிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பழனிசாமி, “அதிமுகவினரை பிரித்து பார்க்கவே முயற்சிக்கின்றனர். எப்போது பார்த்தாலும் அதிமுகவில் குழப்பம் வரவேண்டுமா என்ன? நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். எங்களை யாராலும் பிரிக்க முடியாது. அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது. அதை முயற்சி செய்து பார்த்தால் மூக்குடைந்து போவார்கள்.” என்று தெரிவித்தார்.