ஹைதராபாத்: அமெரிக்காவில் நடைபெற்ற சாலை விபத்தில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், டேகுலபல்லி பகுதியை சேர்ந்த முன்னாள் மண்டல தலைவர் மோகன்ரெட்டி. இவரது மனைவி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி பவித்ரா தேவி. இவர்களுக்கு 2 மகள்கள். இதில் 2-வது மகளான பிரகதிக்கும், சித்திபேட்டையை சேர்ந்த ரோஹித் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 2 மகன்கள். ரோஹித், அவரது மனைவி பிரகதி, ரோஹித்தின் தாயான சுனிதா அமெரிக்காவில் புளோரிடாவில் வசித்து வந்தனர். இந்நிலையில், இந்திய நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் ரோஹித், அவரது மனைவி பிரகதி, மாமியார் சுனிதா மற்றும் 2 மகன்கள் என அனைவரும் காரில் புளோரிடாவில் ஷாப்பிங் செய்ய சென்று கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் இருந்து வந்த ஒரு டிரக் இவர்களின் கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பிரகதி (35), இவரது மகன் அர்வின் (8), சுனிதா (56) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ரோஹித் மற்றும் மற்றொரு மகன் படுகாயமடைந்தனர். இவர்கள் தற்போது புளோரிடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து அறிந்ததும் இரு வீட்டாரும் கதறி அழுதனர். உடனடியாக பிரகதியின் பெற்றோர் அமெரிக்காவுக்கு புறப்பட்டுள்ளனர். இறுதி சடங்குகள் புளோரிடாவிலேயே நடக்கிறது.