பஞ்சாபில் கோயில் மீது கையெறிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளில் ஒருவர் நேற்று போலீஸ் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் தாகுர்துவாரா பகுதியில் உள்ள இந்து கோயில் மீது கடந்த வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் பைக்கில் வந்த இருவர் கையெறிகுண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீஸார், குற்றவாளிகளை குர்சிதக், விஷால் என அடையாளம் கண்டனர். அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் பஞ்சாபில் ராஜசான்சி பகுதியில் மோட்டார் பைக்கில் வந்த அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். உடனே இருவரும் மோட்டர் பைக்கை விட்டுவிட்டு, போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலைமை காவலர் ஒருவர் காயம் அடைந்தார். இதையடுத்து போலீஸார் திருப்பி சுட்டதில் குர்சிதக் காயம் அடைந்தார். விஷால் அங்கிருந்து தப்பியோடி விட்டார். காயம் அடைந்த குர்சிதக், பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். தப்பியோடிய விஷாலை போலீஸார் தேடி வருகின்றனர்.