புதுச்சேரி: “புதுச்சேரி, காரைக்காலில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும். அது நம் உணர்வு.” என்று முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தினார்.
புதுவை சட்டப்பேரவையில் பூஜ்யநேரத்தில் சுயேச்சை எம்எல்ஏ நேரு பேசுகையில், “தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக புதுவை, காரைக்காலில் செயல்படும் வணிக நிறுவனங்களில் உள்ள பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகளில் தமிழ் எழுத்துகளின் வாசகங்கள் முதல் வரிசையில் இடம்பெற செய்ய வேண்டும். அதற்கடுத்து தான் பிறமொழி வாசகங்கள் இடம்பெற செய்ய வேண்டும்.
பல மாநிலங்களில் அவர்கள் சார்ந்த தாய்மொழி எழுத்துக்களில்தான் வணிக நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பெயர்ப் பலகையில் தமிழ் இருக்க வேண்டும் என்ற விதியை. பெரும்பாலான கடைகள் பின்பற்றுவதில்லை. இந்த விதியை பின்பற்றாத கடையின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாயமாக்க வேண்டும். தமிழுக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது.” என்றார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “புதுவையில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகையில், தமிழ் எழுத்து இருப்பது கட்டாயம். தமிழ் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும், எழுத வேண்டும். வணிகர்கள், வியாபாரிகள் தங்களது கடை பெயர் பலகையில் தமிழ் எழுத வேண்டும். அது நமது உணர்வு. இதைப்போல் அரசு விழா அழைப்பிதழ்களையும் தமிழில்தான் அச்சடிக்க வேண்டும்.” என்றார்.