ராமேஸ்வரம் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் உயிரிழப்பு: அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்

சென்னை: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில், கூட்ட நெரிசலில் சிக்கி, மயங்கி விழுந்த ராஜ்தாஸ் என்ற பக்தர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ள இந்து முன்னணி, உரிய முன்னேற்பாடுகளை செய்யாத இந்து சமய அறநிலையத்துறையை கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்செந்தூர் கோயிலில் தரிசனத்திற்காக நின்ற பக்தர் மூச்சு திணறி உயிரிழந்தது வேதனையான சம்பவம். முன்னதாக அடிப்படை வசதிகள் இல்லாமல் பக்தர்கள் பல மணிநேரம் காக்க வைக்கப்படுவதை திருச்செந்தூரில் பக்தர்கள் தெரிவித்தபோது, அமைச்சர் சேகர் பாபு, திருப்பதியில் நிற்பான் இங்கே என்னவாம் என்று ஒருமையில் பேசியதோடு, மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அமைச்சர் என்கிற மமதையில் பேசி பக்தர்களை அவமரியாதை செய்தார்.

அமைச்சரின் இத்தகைய போக்கு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்ள தைரியம் அளித்தது. இதன் காரணமாக ஈடு செய்ய முடியாத மனித உயிரிழப்பு திருச்செந்தூர் ஆலயத்தில் நிகழ்ந்தது.

காரைக்குடியைச் சேர்ந்த ஓம் குமார் என்ற முருக பக்தர் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்ய ரூ100 டிக்கெட் பெற்று வரிசையில் நின்று இருந்தார். அப்போது கூட்ட நெரிசல் காரணமாக மூச்சு திணறி உயிரிழந்தார்.

இந்நிலையில், “திருச்செந்தூர் கோயிலில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. உங்கள் ஆட்சியை காப்பாற்ற எங்கள் மேல் பழியை போடாதீங்க…” என்ற இறந்தவரின் உறவினர்களின் கதறல், அறநிலையத்துறை அமைச்சரின் செவிகளுக்கு எட்டவில்லை போலும்.

இன்றைய தினம் (18.03.2025) ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில், கூட்ட நெரிசலில் சிக்கி, மயங்கி விழுந்த ராஜ்தாஸ் என்ற வடமாநில பக்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

அதுபோல் பால்குடம் எடுத்துவந்த பக்தர்களிடமும், அலகு நேர்த்தி காவடி எடுத்து வரும் பக்தர்களிடமும் கோயிலில் உள்ள பாதுகாவலர்கள், அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர் என்பதை கடந்த ஆண்டுகளில் பார்த்தோம்.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலையில் ஒரு வயதான அம்மாவிற்கு சக்கர நாற்காலியோ அல்லது பேட்டரி வாகனம் ஏற்பாடு செய்யாமல் தவிக்க வைத்த சம்பவம் நடந்தது.

தற்பெருமை பேசுவதிலும் முதல்வரின் புகழ்பாடுவதிலும் வல்லவராக அமைச்சர் சேகர் பாபு இருக்கிறாரே தவிர, பக்தர்களின் கோரிக்கைகளை பிரச்சினைகளை காது கொடுத்து கேட்கக்கூட மறுக்கிறார் என்பது வேதனையான உண்மை.

கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களை இந்த அரசும் தேவஸ்தானமும் மதிப்பதில்லை. எவ்வளவு கூட்டம் வந்தாலும் உண்டியல் நிறைகிறதா என்று பார்க்கிறார்களே தவிர பக்தர்களுக்கு எந்தவித வசதிகளையும் செய்து தருவதில்லை. கூட்டத்தை முறைப்படுத்தி விரைவாக பாதுகாப்பாக தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்வது இல்லை.

ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று தெரிந்தும் உரிய முன்னேற்பாடு செய்யாத திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி தேவஸ்தானத்தையும், ராமேஸ்வரம் திருக்கோயில் நிர்வாகத்தையும், இந்து சமய அறநிலையத்துறையையும் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடை அரசு வழங்க வேண்டும். மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். இந்த உயிரிழப்பு சம்பவங்களுக்கு தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்று இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுத்திட இந்து முன்னணி சார்பில் வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.