IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் வரும் சனிக்கிழமை (மார்ச் 22) அன்று கொல்கத்தாவில் தொடங்க இருக்கிறது. வரும் மே 25ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவை எதிர்நோக்கி பெரும் ரசிகர் கூட்டமே காத்திருக்கிறது எனலாம். உலகத் தரமான கிரிக்கெட் வீரர்கள் இணைந்து விளையாடுவதாலேயே ஐபிஎல் கிரிக்கெட் மீதான மதிப்பும் உச்சத்தில் இருக்கிறது எனலாம்.
ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் களமிறங்குகின்றன. ஹோம் மைதானத்தில் 7 போட்டிகளும், அவே மைதானங்களில் 7 போட்டிகளும் என ஒவ்வொரு அணிகளும் தலா 14 லீக் போட்டிகளை விளையாட உள்ளன. எந்த அணி அதன் ஹோம் மைதானத்தில் அதிக வெற்றிகளை குவிக்க முடிகிறதோ, அந்த அணிகளே பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் எனலாம்.
IPL 2025 LSG: சப்பை டீமா லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்?
அதேபோல், 10 அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் நிறைந்திருந்தாலும், சரியான காம்பினேஷன் இல்லாத அணிகள் பலவீனமாக காட்சியளிக்கும் எனலாம். அந்த வகையில், இந்த முறை எக்கச்சக்கமான நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் பலவீனமாக காட்சியளிக்கும் அணியாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி (Lucknow Super Giants) இருக்கிறது.
IPL 2025 LSG: லக்னோ கடந்து வந்த பாதை
2022இல் லக்னோ அணி ஐபிஎல் தொடரில் களமிறங்கியது. கடந்த மூன்று ஆண்டுகள் கேஎல் ராகுல் தலைமையிலும், அவர் காயமடைந்த சமயங்களில் குர்னால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் ஆகியோர் கேப்டன்ஸி கவனித்துக்கொண்டனர். 2022, 2023 என அடுத்தடுத்து பிளே ஆப் வரை வந்தும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இயலாமல் வெளியேறிய லக்னோ கடந்த முறை 7வது இடத்தில் நிறைவு செய்தது.
IPL 2025 LSG: ஏலத்தில் எடுத்த முக்கிய வீரர்கள்
இதையொட்டி, மெகா ஏலத்தை முன்னிட்டு கேஎல் ராகுலை விடுவித்தது. நிக்கோலஸ் பூரன் (ரூ.21 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.11 கோடி), மயங்க் யாதவ் (ரூ.11 கோடி), மோஷின் கான் (ரூ.4 கோடி) , ஆயுஷ் பதோனி (ரூ.4 கோடி) ஆகியோரை தக்கவைத்தது.
மெகா ஏலத்தில் ரிஷப் பண்டை ரூ.27 கோடி கொடுத்து எடுத்து பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. கேப்டன் மெட்டீரியல் என்பதை தாண்டி ரிஷப் பண்டுக்கு இருந்த நட்சத்திர அந்தஸ்தை கருத்தில் கொண்டும் ரூ.27 கோடி கொடுத்து லக்னோ எடுத்தது எனலாம். இவர் மட்டுமின்றி, ஆவேஷ் கான் (ரூ.9.75 கோடி), ஆகாஷ் தீப் (ரூ. 8 கோடி), டேவிட் மில்லர் (ரூ.7.5 கோடி) என முக்கிய வீரர்களை பல கோடி கொடுத்து எடுத்திருக்கிறது. ஆனால்ஸ இவர்கள் என்ன காம்பினேஷனில் விளையாடுவார்கள் என்பதை இங்கு காணலாம்.
IPL 2025 LSG: ஓப்பனிங்கில் யார் யார்?
அதாவது, இவர்களுக்கு சரியான ஓப்பனர்கள் இல்லை. தற்போதைய சூழலில் மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோரே லக்னோவின் ஓப்பனர்களாக இருப்பார்கள். இவர்கள் ஓப்பனிங்கில் செட்டாகிவிட்டால் அடுத்து நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட், டேவிட் மில்லர் என இடது கை வீரர்கள் நிரம்பிய மிடில் ஆர்டராக இருக்கும்.
மார்க்ரம் முதற்கட்ட பிளேயிங் லெவனில் இடம்பெறுவார். அவர் தற்போது மோசமான பார்மிலும் இருக்கிறார். அனுபவ வீரர் என அவரை எடுத்து, சில போட்டிகளில் தொடர்ந்து சொதப்பினால் அவருக்கு பதில் மற்றொரு தென்னாப்பிரிக்க வீரரான மேத்யூ ப்ரீட்ஸ்கே அல்லது இந்திய இளம் வீரரான ஆர்யன் ஜூயலை எடுக்கலாம்.
IPL 2025 LSG: மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஆர்யன் ஜூயல்
மேத்யூ ப்ரீட்ஸ்கே சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 150 மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக 83 ரன்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஆர்யன் ஜூயல் உள்நாட்டு தொடர்களில் உத்தர பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். இவரும் கடந்த சில காலமாகவே பல தொடர்களில் ரன்களை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே ஓப்பனர்கள் செட்டாகாவிட்டால் இவர்களை நிச்சயம் எடுக்கலாம்.
IPL 2025 LSG: பந்துவீச்சு படை
ஆல்-ரவுண்டர்களில் ஆயுஷ் பதோனி மற்றும் ஷாபாஸ் அகமது கண்டிப்பாக இருப்பார்கள். இவர்களுக்கு பேக்-அப்பாக அப்துல் சமத், யுவ்ராஜ் சௌத்ரி, அர்ஷின் குல்கர்னி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோர் இருக்கின்றனர். இவர்களுடன் சுழற்பந்துவீச்சில் ரவி பிஷ்னோய், மணிமாறன் சித்தார்த் இருப்பார். வேகப்பந்துவீச்சில் ஆவேஷ் கான், மோஷின் கான், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் முதன்மையான பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள்.
IPL 2025 LSG: மயங்க் யாதவ் காயம்
ஆனால், இவர்களுக்கு மொத்தம் 6 வெளிநாட்டு வீரர்களே இருக்கின்றனர். அதுவும் 5 பேர் பேட்டர்கள், ஷமார் ஜோசப் மட்டுமே வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார். அவரும் ஆரம்ப கட்ட பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு குறைவு.
இவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் ரூ.11 கோடி கொடுத்து தக்கவைத்த மயங்க் யாதவ் சில போட்டிகளை தவறவிடுவார் என கூறப்படும் நிலையில், இவர்களின் பந்துவீச்சே மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மோஷின் கான், ஆவேஷ் கான், ஆகாஷ் தீப் ஆகியோரை இந்த அணி மிகவும் நம்பியிருக்கிறது.
IPL 2025 LSG: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பிளேயிங் லெவன்
மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம்/மேத்யூ ப்ரீட்ஸ்கே, நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், ஆயுஷ் பதோனி, ஷாபாஸ் அகமது/மணிமாறன் சித்தார்த், ரவி பிஷ்னோய், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், ஷமார் ஜோசப். இம்பாக்ட் வீரர்: மோஷின் கான்
IPL 2025 LSG: பலவீனம் என்ன?
அதாவது, இவர்களின் பேட்டிங் சிறப்பாக இருக்கிறது. இந்த அணி 200 ரன்களை அடித்தாலும், இவர்களது பந்துவீச்சு 200 ரன்களையும் கொடுத்துவிடும். மயங்க் யாதவ் இல்லாதபட்சத்தில் அதாவது X பேக்டர் வீரர் இல்லாமல் இந்த அணி பந்துவீச்சில் சற்று பலவீனமாகவே இருக்கிறது. நிச்சயம் இந்த அணி பிளே ஆப் செல்ல திணறும்.