நியூயார்க்,
விண்வெளியில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்.) குறுகிய கால பரிசோதனை மேற்கொள்ள நாசா திட்டமிட்டது. இதற்காக, கடந்த ஆண்டு ஜூன் 5-ந்தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லயம்ஸ் மற்றும் பச் வில்மோர் ஆகிய 2 விஞ்ஞானிகளும் சென்றனர்.
அவர்கள் ஒரு வார காலம் ஐ.எஸ்.எஸ். நிலையத்தில் தங்கி ஆய்வு பணி மேற்கொள்ள இருந்தனர். இந்நிலையில், பணி முடிந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்களுடைய பயணம், விண்கல தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டது. இதனால், பூமிக்கு திரும்ப முடியாமல் தொடர்ந்து 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே சிக்கி தவிக்கும்படியான சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்ற டிரம்ப் அரசின் முயற்சியால், விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா அமைப்பு இணைந்து ராக்கெட் ஒன்றை அனுப்பியது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் என்ற விண்கலத்துடன் பால்கன் 9 ரக ராக்கெட் ஒன்று கடந்த 15-ந்தேதி அதிகாலை புறப்பட்டு சென்றது.
எனினும், திட்டமிட்ட நேரத்திற்கு பதிலாக 10 மணிநேர காலதாமதத்துடன், கடந்த 16-ந்தேதி காலை 9.40 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்கலம் சென்றடைந்தது. அந்த விண்கலத்தில் இருந்த 4 விஞ்ஞானிகளையும் வில்லியம்ஸ் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழுவினர் கட்டியணைத்து வரவேற்றனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இதனால், நீண்டகாலம் விண்வெளியில் காத்திருக்கும் சுனிதா மற்றும் வில்மோர் இருவரும் பூமிக்கு திரும்புவதற்கான முக்கிய நடவடிக்கை நிறைவடையும் நிலையை அடைந்துள்ளது. அவர்கள் 2 பேரும் பால்கன் விண்கலத்தில் அமர்ந்தனர். அவர்களுடைய பயணம் தொடங்கியுள்ளது. இந்த முறை திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்பாக, இன்று மாலை புளோரிடா கடல் பகுதியை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவரும் விண்வெளியில் 287 நாட்களை கழித்துள்ளனர். நீண்டகாலம் விண்வெளியில் அவர்கள் தங்கியிருந்தது உலகளவில் கவனம் பெற்றது. இவ்வளவு நாட்கள் விண்வெளி திட்டத்தில் இருந்த 2 பேருக்கும் இழப்பீடு எதுவும் கிடைக்க வாய்ப்பு உள்ளதா? என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுபற்றி நாசாவில் இருந்து ஓய்வு பெற்ற விஞ்ஞானியான கேத்தரீன் கிரேஸ் கேடி கோல்மேன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறும்போது, நாசா விஞ்ஞானிகளின் கூடுதல் பணிநேரத்திற்காக சிறப்பு சம்பளம் என எதுவும் கிடைக்காது. அவர்கள் பணியாளர்களாக இருந்தபோதும், பூமியில் எப்போதும் மேற்கொள்ளும் வேலைக்காக பயணம் செய்வது போன்றே அவர்களுடைய விண்வெளி பயணநேரமும் கணக்கில் கொள்ளப்படும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும்போது, உணவு மற்றும் வாழ்க்கைக்கான செலவுகள் உள்ளிட்ட நாசாவின் சம்பளத்துடன் வழக்கம்போல் கிடைக்கும் ஊதியமே அவர்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் என்றார்.
ஆனால், கூடுதல் இழப்பீட்டு தொகை எனும்போது, நாள் ஒன்றுக்கு ரூ.347 (4 அமெரிக்க டாலர்) என்ற சொற்ப அளவிலான பணமே கிடைக்கும். அந்த வகையில், 287 நாட்கள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்துள்ளனர். இதனால் ஏறக்குறைய ரூ.1 லட்சம் (1,148 அமெரிக்க டாலர்) கூடுதல் இழப்பீட்டு தொகையாக கிடைக்கும்.
2 விஞ்ஞானிகளும் ஜி.எஸ்.-15 சம்பள பிரிவில் வருபவர்கள். இந்த உயர் வகை பிரிவின் கீழ் வரும் ஊழியர்களுக்கு ஆண்டு அடிப்படை சம்பளம் ரூ.1.08 கோடி முதல் ரூ.1.41 கோடி வரை (12 லட்சத்து 5 ஆயிரத்து 133 அமெரிக்க டாலர் முதல் 1 லட்சத்து 62 ஆயிரத்து 672 அமெரிக்க டாலர் வரை) இருக்கும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்கள் தங்கியிருந்த இருவருக்கும் ரூ.81 லட்சம் முதல் ரூ.1.05 கோடி வரை (93 ஆயிரத்து 850 அமெரிக்க டாலர் முதல் 1 லட்சத்து 22 ஆயிரத்து 4 அமெரிக்க டாலர் வரை) சம்பளம் கிடைக்க பெறும்.
கூடுதல் ஊக்கத்தொகையையும் சேர்த்து, அவர்களுக்கு கிடைக்கும் மொத்த சம்பளம் ரூ.82 லட்சம் முதல் ரூ.1.06 கோடி வரை (94 ஆயிரத்து 998 அமெரிக்க டாலர் முதல் 1 லட்சத்து 23 ஆயிரத்து 152 அமெரிக்க டாலர் வரை) இருக்கும் என தெரிய வந்துள்ளது. பூமிக்கு திரும்பி வந்த பின்பு அவர்கள் மற்றவர்களை போன்று இயல்பான நிலைக்கு திரும்ப நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.
இதுதவிர, காய்ச்சல், தலைசுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என கூறப்படுகிறது. நடப்பதற்கு கூட சிரமம் ஏற்படும் என தகவல் தெரிவிக்கின்றது.