இந்திய நேரப்படி நாளை (மார்ச் 19) அதிகாலை புவியீர்ப்பு விசையைத் தொட்டு பூமியில் கால் பதிக்கவிருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்.
சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக (286 நாள்கள்) பயணித்து வரும் நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் உள்ளிட்ட நால்வரை பூமிக்கு அழைத்து வர டிராகன் விண்கலன் கடந்த மார்ச் 16-ம் தேதி அனுப்பப்பட்டது.
இந்திய நேரப்படி இன்று (மார்ச் 18) காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை நோக்கி சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வரும் தங்களது பயணத்தைத் தொடங்கினர்.

இந்திய நேரப்படி நாளை (மார்ச் 19) ‘அதிகாலை 3:27 மணி அளவில்’ புவியீர்ப்பு விசையைக் கிழித்துக் கொண்டு வேகத்துடன் பூமியை நோக்கி வரும் டிராகன் விண்கலம் வேகம் குறைந்து, பாரசூட்டுகள் விரிக்கப்பட்டு பாதுகாப்பாக பெருங்கடலில் இறங்கும் என நாசா தெரிவிக்கிறது.
இவர்களுக்குப் பதிலாக, தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ள ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் அங்கு பணிகளைத் தொடர்வார்கள் என்று கூறப்படுகிறது.
சுனிதா வில்லியம்ஸ் பயண நேரக் குறிப்புகள்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் பூமிக்குத் திரும்புவது தொடர்பாக கால அட்டவணையை நாசா வெளியிட்டுள்ளது. இந்திய நேரப்படி அதன் நேரக் குறிப்புகள் இங்கே…

*மார்ச் 18, காலை 8:15 மணி: சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வர் டிராகன் விண்கலத்திற்குள் சென்று, அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.
*காலை 10:35 மணி: டிராகன் கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டுப் பிரிந்தது (Undocking) பயணத்தைத் தொடங்கியது.
*மார்ச் 19, அதிகாலை 2:41 மணி: டிராகன் கலம் அதன் சுற்றுப்பாதையிலிருந்து வெளியில் வந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்.
*அதிகாலை 3:27 மணி: கலத்தின் வேகம் குறைந்து, பாரசூட்டுகள் விரிக்கப்பட்டு பாதுகாப்பாக பெருங்கடலில் இறங்கும்.
*காலை 05:00 மணி: பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்கள் செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர்.
இதன் நேரலைக் காட்சிகளை இந்திய நேரப்படி நாளை அதிகாலை 2:15 மணிக்கு நாசா நேரடி ஒளிப்பரப்புச் செய்கிறது. அதனை நாசாவின் ‘NASA+’ இணையதளத்தில் காணலாம்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
