வாஷிங்டன்,
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்.) இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லயம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய 2 விஞ்ஞானிகளும் அமெரிக்காவை சேர்ந்த நாசா அமைப்பின் ஆராய்ச்சி பணிகளுக்கு உதவியாகவும், பரிசோதனை மேற்கொள்ளவும் சென்றனர்.
அவர்கள் ஒரு வார காலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். அந்த பணி முடிந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்களுடைய பயணம், விண்கல தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டது. இதனால், சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே அவர்கள் தங்க வேண்டியிருந்தது. அப்போது அவர்கள் மேற்கொண்ட பணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை பற்றிய புகைப்பட தொகுப்புகளை காணலாம்.
விண்வெளி வீரர்களான இருவரும் ஐ.எஸ்.எஸ். ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட உதவியாக செயல்பட்டனர்.
அவர்கள் மரத்திலான செயற்கைக்கோள்களை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நிலவு மற்றும் செவ்வாய் கோளில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்கான திட்டங்களுக்கு தேவையானவற்றை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
சிறப்பான உலைகளை வடிவமைப்பதற்கான ஆய்வு பணிகளுக்கு உதவியாக செயல்பட்டனர்.
ஐ.எஸ்.எஸ். நிலையத்தில் செடிகளை வளர்க்கும் பணிகளும் நடைபெற்று உள்ளன. இதன்படி, குறிப்பிட்ட இடைவெளியில் செடிகள் முளைக்க செய்யப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டன. அதுசார்ந்த சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த பணிக்கு உதவியாகவும் ஈடுபட்டு உள்ளனர்.
அவர்கள் பணிக்கு இடையே, உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டனர். ஓய்வு நேரத்தில் பயனுள்ள முறையில் பொழுதுபோக்கும் வகையில் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள சில பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே சென்றும், சில பழுதுகளை சரி செய்யும் வீடியோ காட்சிகளும் நாசாவால் வெளியிடப்பட்டு உள்ளன.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளியில் மேற்கொள்ளும் பயணம் பற்றிய வீடியோ பதிவுகளும் உள்ளன.
ஆய்வுக்கு தேவையான சில உபகரணங்களை இணைக்கும் பணிகளையும் அவர்கள் மேற்கொண்டனர்.
அதனை சிறப்பாகவும் செய்து வெற்றி அடைந்தனர். இந்நிலையில், 9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்புகின்றனர்.