கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்,
செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க
“முதல்வர் சொல்லியிருப்பதில் நியாயம் இருக்கிறது. பாராளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வாசித்த கடிதத்திலேயே, ‘கையெழுத்து போடுகிறோம்’ என்று தமிழக அரசு எங்கும் சொல்லவில்லை என்பது தெளிவாக இருக்கிறது. இந்த நிலையில், இப்படி உண்மைக்குப் புறம்பான தகவலை ஒன்றிய அமைச்சர் பேசலாமா… நாங்கள் ‘புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்; நிதி கொடுங்கள்…’ என்கிறோம். அவர் ‘ஏன் நிதி கொடுக்க முடியாது’ என்றுதான் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு, எட்டு கோடி மக்களின் பிரதிநிதிகளை ‘அநாகரிகமானவர்கள்’ என்று பேச அவர் யார்… ஒன்றிய அரசு சொல்வதைக் கேட்டு நடக்க நாங்கள் ஒன்றும் அடிமைக் கூட்டம் கிடையாது; சுயமரியாதைக்காரர்கள். தமிழகத்தில் சில தனியார் பள்ளிகளில் மூன்றாவது மொழி இருப்பது, ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் காரணமாகத்தான். தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், இரு மொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. மும்மொழிக் கொள்கையில் மற்ற மாநிலங்கள் சாதித்ததைவிட, மிகக் கூடுதலாகவே தமிழகம் இரு மொழிக் கொள்கையில் சாதித்துக் காட்டிவருகிறது. உலகில் தலைசிறந்த பண்பாடுகொண்ட தமிழர்களுக்கு, வெளியிலிருந்து யார் வந்தும் நாகரிக வகுப்பு எடுக்கத் தேவையில்லை!”

ஏ.பி.முருகானந்தம்
மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க
“இப்போது முதல்வர் பேசியிருப்பதுதான் அநாகரிகத்தின் உச்சம். தி.மு.க-வினரிடம் நாகரிகத்தை எதிர்பார்ப்பதில் எந்தப் பயனுமில்லை என்பதை இந்தப் பேச்சின் மூலம் முதல்வரே நிரூபித்திருக்கிறார். நிதியை வாங்கிக்கொண்டு இல்லை என்று நாடகமாடுவதுபோல, இல்லாத இந்தித் திணிப்பைவைத்து அரசியல் செய்கிறது தி.மு.க. ‘தமிழ்… தமிழ்…’ என்று பேசும் தி.மு.க., இதுவரை தமிழ் வளர்ச்சிக்காக ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருக்கிறதா… தங்களின் அரசியல் சுயலாபத்துக்காக இரு மொழிக் கொள்கையை தி.மு.க கடைப்பிடித்துவருகிறது. முதல்வர் குடும்பம் தொடங்கி தி.மு.க-வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி சொல்லித்தரத் தடை கிடையாது. ஆனால், பொதுவெளியில் மட்டும் போலியான இந்தி எதிர்ப்பைக் காட்டுவார்கள். இந்த உண்மையைத் தமிழக பா.ஜ.க வெளிப்படையாகப் பேசி தோலுரித்துக் காட்டுகிறது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், வாய்க்கு வந்ததைப் பேசுகிறார் முதல்வர். இது அவர் வகிக்கும் பொறுப்புக்குக் கொஞ்சமும் அழகில்லை. மொழி விவகாரத்தில் தி.மு.க-வின் கபடநாடகத்தை மக்கள் நன்கு புரிந்துகொண்டார்கள். இந்த துரோகத்துக்கு, தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்!”