9 மாதங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்டோர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.

இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடலில் டிராகன் ஸ்பிளாஷ் டவுன் ஆனது. சுனிதா மற்றும் வில்மோருடன் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இருவரும் டிராகன் விண்கலம் மூலம் பூமி திரும்பினர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் பலரும் இவர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தனர். ஸ்பிளாஷ் டவுன் ஆகும் காட்சியை நாசா, ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு செய்து வந்தன.

முன்னதாக, அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் என்ற புதிய விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஐஎஸ்எஸ் நிலையத்துக்கு சென்றனர்.

இவர்கள் 8 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்.7-ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இன்றி பூமிக்கு திரும்பியது. இதைத் தொடர்ந்து கடந்த செப்.28-ம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் அமெரிக்காவின் நிக் ஹேக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் ஆகிய இரு வீரர்களுடன் ஐஎஸ்எஸ் நிலையம் சென்றது.

கடந்த 16-ம் தேதி அமெரிக்காவை சேர்ந்த ஆனி மெக்லைன், நிகோல் அயர்ஸ், ஜப்பானை சேர்ந்த டகுயா ஒனிஷி, ரஷ்யாவை சேர்ந்த கிரிஸ் பெஸ்கோஸ் ஆகியோர் டிராகன் விண்கலத்தில் ஐஎஸ்எஸ் நிலையம் சென்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 7 வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு செய்தனர். புதிய வீரர்கள் ஐஎஸ்எஸ் நிலையம் வந்த பிறகு அவர்களிடம் பணிகளை ஒப்படைத்துவிட்டு பழைய வீரர்கள் பூமிக்கு திரும்புவது வழக்கம். இதற்கு 5 நாட்கள் வரை ஆகும். ஆனால் இந்த முறை 2 நாட்களிலேயே பழைய விண்வெளி வீரர்கள் நேற்று பூமிக்கு புறப்பட்டனர்.

இதன்படி அமெரிக்காவை சேர்ந்த நிக் ஹேக், சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் டிராகன் 9 விண்கலத்தில் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 17 மணி நேர பயணத்துக்குப் பிறகு இன்று அதிகாலை 3.27 மணி அளவில் அமெரிக்காவின் புளாரிடா கடல் பகுதியில் டிராகன் விண்கலம் வந்து சேர்ந்தது.

இதுகுறித்து நாசா வட்டாரங்கள் கூறியதாவது: சுனிதா வில்லியம்ஸும், பேரி வில்மோரும் விண்வெளியில் 9 மாதங்கள் 13 நாட்கள் தங்கியிருந்தனர். அவர்கள் உட்பட 4 வீரர்களுக்கும் பல்வேறு உடல்நலக்குறைவுகள் ஏற்படும். குறிப்பாக அவர்களின் எலும்புகள், தசைநார்கள் பலவீனம் அடைந்திருக்கும். அவர்களால் எழுந்து நடக்க முடியாது. 4 பேரும் மறுவாழ்வு மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு 6 வாரங்கள் தீவிர பயிற்சி அளிக்கப்படும். குறிப்பாக தரையில் கால் ஊன்றி நடப்பதற்கு பயிற்சி வழங்கப்படும். ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் வழங்கப்படும். அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு வீடுகளுக்கு செல்வார்கள். இவ்வாறு நாசா வட்டாரங்கள் தெரிவித்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.