அறிவிப்பு வெளியாகி 2 ஆண்டாகியும் காற்றாலை மின்நிலையங்கள் தொடங்கப்படவில்லை: தொழில் துறையினர் அதிருப்தி

‘அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 5 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்கள் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகி 2 ஆண்டுகளாகியும், இதுவரை தொடங்கப்படவில்லை’ என தொழில் துறையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 10,900 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்கள் உள்ளன. அதில், 9,150 மெகாவாட் தமிழக மின்வாரிய மின்வழித் தடத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 1,750 மெகாவாட் மத்திய மின்தொடரமைப்பு கழகத்தின் வழிடத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மொத்த மின்னுற்பத்தியில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி மூலமாக பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 5 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்களை அமைக்கும் அறிவிப்பை 2023-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்டது. 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், இதுவரை ஒரு மெகாவாட் திறனில் கூட மின்நிலையம் அமைக்கப்படவில்லை.

இதுகுறித்து, தொழில் துறையினர் கூறியதாவது: தமிழகம் மற்றும் குஜராத்தில் காற்றாலை மின்நிலையம் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது. ஒரு மெகாவாட் திறனில் காற்றாலை அமைக்க 3 முதல் 5 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. குஜராத் அரசு காற்றாலை அமைக்க நிலங்களை மேம்படுத்தி, குறைந்த விலைக்கு குத்தகைக்கு வழங்குகிறது.

தமிழகத்தில் நிலத்தின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. காற்றாலைக்கு சாதகமான இடங்களில் நிலங்களை தனியார் நிறுவனங்கள் வாங்கி, அதிக விலைக்கு விற்கின்றன. மின்வாரியத்தின் காற்றாலைகள் தூத்துக்குடி, மதுரை, கோவை, கன்னியாகுமரி, திருப்பூரில் உள்ளன. கடந்த 1986 முதல் 1993 வரை அமைக்கப்பட்ட இவற்றில் பல தற்போது முடங்கி உள்ளன.

அந்த இடங்களில் உள்ள நிலத்தை இலவசமாக வழங்கி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து காற்றாலை மின்நிலையம் அமைக்க அனுமதி அளித்தால் பலரும் திட்டத்தை செயல்படுத்த முன்வருவர். எனவே, இனியும் தாமதிக்காமல் தனியாருடன் இணைந்து காற்றாலை மின்நிலையம் அமைக்கும் திட்டத்தை மின்வாரியம் விரைந்து செயல்படுத்த வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டில் தொடங்கப்பட்ட பசுமை எரிசக்தி கழகம் மூலமாக, நீரேற்று மின்திட்டம், சிறிய நீர்மின் திட்டம், பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் திட்டம் போன்றவற்றை செயல்படுத்த தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், காற்றாலை மின்திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும்’’ என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.