முகலாய மன்னர் அவுரங்கசீப்பை பரசுராமர் மற்றும் நாதுராம் கோட்சேவுடன் ஒப்பிட்டு அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்திருப்பது உத்தரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.யின் மிர்சாபூரில் ராஷ்ட்ரிய ஷோசித் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா நேற்று கூறும்போது, “அவுரங்கசீப் கொடூரமானவர் என்றால், நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே மிகவும் கொடூரமானவர். காந்தியின் படுகொலை பற்றி பாஜக விவாதிக்கவில்லை. முதலில் நாதுராம் கோட்சே பற்றி விவாதித்த பின் அவர்கள், அவுரங்கசீப் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும்” என்றார். இதற்கு இந்துத்துவா அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுபோல், ம.பி.யின் ஜபல்பூரில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரேகா வினோத் ஜெயின் தனது சமூக வலைதளப் பதிவில், “அவுரங்கசீப் தனது சகோதரன் தாராஷிகோவின் தலையை துண்டித்து, அதை அவரது தந்தை ஷாஜகானிடம் ஒப்படைத்தார். அதேபோல், பரசுராமர் தனது தந்தை ஜமாதக்னி உத்தரவின் பேரில் தனது தாய் ரேணுகாவின் தலையை துண்டித்தார். பரசுராமருக்கு கோயில் கட்டி கும்பிடும் இந்துக்கள் அவுரங்கசீப்பை மட்டும் வெறுப்பது ஏன்?” என குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து ரேகா வினோத் ஜெயினிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரேகாவுக்கு ஜபல்பூர் நகர காங்கிரஸ் தலைவர் சவுரப் சர்மா அனுப்பியுள்ள நோட்டீஸில், “நீங்கள் இந்திய அரசியலமைப்பை மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியின் அமைப்பு விதிகளையும் மீறிவிட்டீர்கள். உங்கள் கருத்து கட்சியின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது” என்று விமர்சித்துள்ளார்.
நாக்பூரில் கலவரம்: இதனிடையே, மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் சமாதியை அகற்ற வலியுறுத்தும் விவகாரத்தில் கலவரம் வெடித்துள்ளது. சமாதியை அகற்றக் கோரி விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பாஜ்ரங்தளம் அமைப்பினர் சுமார் 250 பேர் நாக்பூரில் நேற்று முன்தினம் ஊர்வலம் நடத்தினர். வென்கோவர் பகுதியில் இந்த ஊர்வலம் வந்தபோது அங்கு அவுரங்கசீப்பின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. இது தொடர்பாக எழுந்த புரளி காரணமாக முஸ்லிம் இளைஞர்களும் வீதிக்கு வந்தனர்.
இதையடுத்து இருதரப்பு மோதல் வெடித்தது. இதை தடியடி நடத்தி போலீஸார் அடக்க முயன்றனர். இதில் 14 போலீஸார் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் போலீஸாரின் 3 வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு அங்கு அமைதி திரும்பிய நிலையில் நகரின் மூன்று பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் பிடித்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.