சென்னை: தொகுதி மறுவரையறை குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் 3 மாநில முதல்வர்கள் பங்கேற்பதாக திமுக மருத்துவர் அணி செயலாளரும் எம்எல்ஏவுமான நா.எழிலன் தெரிவித்தார்.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் சென்னையில் மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளது.
இதில், கேரளா முதல்வர் பினராயி விஜயன், கோவிந்த், பினாய் விஷ்வம், கும்பகடி சுதாகரன், கேரள காங்கிரஸ் பி.ஜே.ஜோசப், மணி, எம்.கே.பிரேம சந்திரன், ஆந்திராவிலிருந்து மிதுன் ரெட்டி, தெலங்கானாவின் முதல்வர் ரேவந்த் ரெட்டி, கே.டி.ராமராவ், வினோத் குமார் எம்.பி., பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன், கர்நாடகாவிலிருந்து துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் இடங்கள் 80-ல் இருந்து 143 ஆகவும், பிஹாரில் 40-ல் இருந்து 79-ஆகவும், மத்திய பிரதேசத்தில் 29-ல் இருந்து 52-ஆகவும் அதிகரிக்கக் கூடும். ஆனால், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை அதே அளவில் குறைவாகத்தான் இருக்கும்.
உரிமைக்கான குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்க நமது பிரதிநிதித்துவம் இருந்தால் தான் முடியும். இவற்றை உணர்ந்துதான் முதல்வர் களம் அமைக் கிறார்; நியாயம் கேட்கிறார். இவ்வாறு அவர் தெரி வித்தார்.