அவுரங்கசீப் கல்லறையை இடித்து அகற்ற வேண்டிய தேவை என்ன? – வேல்முருகன்

சென்னை: நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தலைவிரித்தாடி வரும் நிலையில், அவுரங்கசீப் கல்லறையை இடித்து அகற்ற வேண்டிய தேவை என்ன இருக்கிறது? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவது, தாக்குவது, கொலை செய்வது போன்றவற்றையே தனது முழு நேர பணியாக கொண்டு காவி பயங்கரவாத கும்பல் நாடு முழுவதும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து மத வெறியர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு ஆண்டுகள் பல ஓடிவிட்டன. இருந்தும் அன்று இசுலாமிய மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட அச்சம், தற்போது முன்பைக் காட்டிலும் மேலோங்கியுள்ளது.

சமீபத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மகன் சத்ரபதி சாம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சாவா என்ற இந்தி திரைப்படம் வெளியான பிறகு அவுரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரம் அடைந்திருக்கிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி இந்து அமைப்புகளான விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகள் மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

குறிப்பாக, ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்து அமைப்பு ஒன்று பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதற்கு பாஜக மத்திய அமைச்சர்களும், மகாராஷ்டிரா முதல்வரும் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இத்தகையை போக்கு சர்வாதிகாரத்தின் உச்சமாகும்.

பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு இசுலாமிய மக்கள் மீதான கலவரங்களை திட்டமிட்டு நடத்தி வருகிறது. விநாயகர் சதுர்த்தி, இராம நவமி, ஹோலி போன்ற இந்து பண்டிகை நாட்களில் மசூதிகள் மீது தாக்குதல் நடத்துவது, இஸ்லாமிய மக்களை படுகொலை செய்வது என கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜ.க கலவர ஆட்சி நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சி தான், அவுரங்கசீப் கல்லறை இடித்து அகற்றும் சதித்திட்டமே ஆகும்.

இக்கலவரங்கள் மூலம் பெரும்பான்மை இந்து மக்களிடம் இந்துமதவெறியைத் தூண்டிவிட்டு அவர்களை தங்கள் பக்கம் திரட்டிக்கொள்வது மட்டுமல்லாமல், இஸ்லாமியர்களை எந்த உரிமைகளும் அற்ற இரண்டாந்தர குடிமக்களாக மாற்ற விழைகின்றனர்.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தலைவிரித்தாடி வரும் நிலையில், அவுரங்கசீப் கல்லறையை இடித்து அகற்ற வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

அரசியல் ஒழுக்கமும் இல்லை; ஆன்மிக ஒழுக்கமும் இல்லாத பாஜக அரசு, இஸ்லாமிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்களை நடத்தி, அடுத்தடுத்து வரும் சட்டமன்ற தேர்தல்களை மூலமாக, இந்திய ஒன்றியத்தில் பல்வேறு மாநிலங்களை ஆட்சியை நிறுவி விடலாம் என எண்ணுகிறது.

எனவே, ஒன்றியத்தில் உள்ள இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதோடு, நாட்டின் மதசார்பின்மைக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பல்களுக்கு தக்க பதிலடி கொடுக்க, ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி அழைப்பு விடுக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.