தஞ்சாவூர் மானோஜியப்பா வீதியைச் சேர்ந்தவர் பெரிய பப்பு என்கிற கிருஷ்ணமூர்த்தி (48). அதிமுக-வில் இருந்த இவர், திமுக ஆட்சி வந்த பிறகு திமுக-வில் இணைந்தார். தற்போது தஞ்சாவூர் மாநகர தி.மு.க-வில் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக உள்ளார். பப்பு என்கிற கிருஷ்ணமூர்த்திக்கு வடக்கு வாசல் பகுதியில் சொந்தமாக மதுபான பார் இருந்தது. இந்த பாரை, தஞ்சை விளார் சாலையைச் சேர்ந்த பத்மநாபன்(59) என்பவர் குத்தகைக்கு கொடுத்து இருந்தார்.

இதற்காக ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 பத்மநாபன், பப்புவிற்கு கொடுத்து வந்தார். கொரோனா காலக்கட்டத்தில் மதுபான பார்களுக்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டதால் வியாபாரம் பாதிக்கப்பட்டதில் பேசியபடி குத்தகைத் தொகையை பப்புவிற்கு பத்மநாபனால் கொடுக்க முடியவில்லை எனச் சொல்லப்படுகிறது. கொடுக்க முடியாத பணம் எல்லாவற்றையும் பப்பு மொத்த கணக்கில் சேர்த்து வந்துள்ளார். அத்துடன் அந்த பணத்துக்கு வட்டி போட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி மொத்தம் ரூ.14.50 லட்சம் கேட்டு பப்பு மிரட்டி வந்தாராம்.
இந்த நிலையில், கடந்த 5ம் தேதி கொடுக்க வேண்டிய பணத்துக்கு பதிலாக வீட்டை எழுதி தருமாறு பத்மநாபனிடம் பப்பு மிரட்டியுள்ளார். இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பப்பு, பத்மநாபனை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, பத்மநாபன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்து விட்டார். பத்மநாபன் தரப்பினர், பப்பு கந்துவட்டி கேட்டு மிரட்டி கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்திருந்தனர். அதன் பேரில் தஞ்சை மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து பப்பு என்ற கிருஷ்ணமூர்த்தியை கைது செய்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக பப்புவின் சகோதரர் சின்ன பப்பு என்கிற முத்துக்குமார் (41), தத்தோஜியப்பா சந்தைச் சேர்ந்த பாஸ்கர் (50) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் இருவருரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக வந்த புகாரை தொடர்ந்து பப்புவை கைது செய்திருக்கிறோம். தகராறில் தாக்கப்பட்டதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஏற்கனவே பத்மநாபனுக்கு உடல் நலக்குறைபாடு இருந்ததாகவும் சொல்கிறார்கள். தாக்கியதில் இறந்தாரா என்பது உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகு தெரிய வரும்” என்றனர்.