புதுடெல்லி: “தற்காலத்துக்கு அவுரங்கசீப் சமாதி விவகாரம் பொருந்தாது,” என்று ஆர்எஸ்எஸ் பிரச்சாரப் பிரிவின் தலைவர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு துவங்கி வரும் அக்டோபரில் நூறாவது ஆண்டு நிறைவு பெறுகிறது. இதற்கான கொண்டாட்ட கூட்டங்களை நாடு முழுவதிலும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் நடத்தி வருகின்றனர். அந்தவகையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வரும் மார்ச் 21 முதல் 23 வரை கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஏற்பாடுகளுக்காக ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான சுனில் அம்பேகர் பெங்களூரூ வந்திருந்தார்.அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், அவுரங்கசீப் சமாதி விவகாரம் குறித்து கேட்கபட்ட கேள்விக்கு, “எதன் பேரிலும் கலவரம் என்பது நம் சமூகத்துக்கு நல்லதல்ல. அவுரங்கசீப் சமாதி விவகாரம் இன்றையக் காலகட்டத்துக்கு பொருந்தாது” என்று கூறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்தக் கருத்துக்குப் பிறகு, பாஜக கூட்டணிக் கட்சிகளும் இந்த விவகாரத்தை கண்டித்துள்ளனர். மேலும், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இது குறித்து மகராஷ்டிராவின் அஜித் பவார் தலைமையிலான என்சிபியின் தலைவர் அமோல் மித்காரி கூறும்போது, “சிலருக்கு தைரியம் இருந்தால், அவர்களே தங்கள் பிள்ளைகளுடன் மண்வெட்டியை எடுத்துச் சென்று அவுரங்கசீப்பின் கல்லறையை உடைக்க வேண்டும். ஆனால், இது நடக்காது. ஏனென்றால் இந்த தலைவர்கள் தங்கள் குழந்தைகளை வெளிநாட்டில் படிக்க வைத்து ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள். இவர்கள் செய்வது இந்துக்களை தூண்டிவிடுவதற்கான அரசியல் மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.
இதே விவகாரத்தில் பிஹாரின் ஆளும் கட்சியான ஜேடியுவின் தேசியச் செய்தி தொடர்பாளரான கே.சி.தியாகி கூறும்போது, “அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலம் நல்லதாக நாங்கள் கருதவில்லை. ஆனால் யாருடைய கல்லறையையும் சிதைப்பது எங்கள் பாரம்பரியமாக இருந்ததில்லை. இதுபோல், எந்தக் குறிப்புகளும் ராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
அவுரங்கசீப் விவகாரம் மீண்டும் துவங்க பாலிவுட்டின் ‘சாவா’ (chhaava) திரைப்படம் காரணமாக கருதப்படுகிறது. இது தொடர்பாக அம்மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதம் எழுந்தது. இதில், சமாஜ்வாதி எம்.எல்.ஏவான, அபு ஹாஸ்மி, அவுரங்கசீப்புக்கு ஆதரவாகப் பேசினார். இதனால் அவருக்கு ஏற்பட்ட எதிர்ப்பால், அவர் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதிலும் நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவாகி கைதாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து தப்பிக்க அபு ஹாஸ்மி மகராஷ்டிரா நீதிமன்றத்தில் முன்ஜாமீனும் பெற்றுள்ளார்.
இதனிடையே, மகராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற ஆதரவளிக்கும் வகையில் பேசினார். இவரது கட்சியின் தோழமை அமைப்புகளான விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பஜ்ரங்தளம் மாநில அளவில் போராட்டங்களை அறிவித்தது.
மார்ச் 17-ல் நடைபெற்ற போராட்டத்தில் அவுரங்கசீப் கொடும்பாவி எரிப்பில் வதந்திகளும் கிளம்பின. இதனால், நாக்பூரில் கலவரம் ஏற்பட்டு பயூம் கான் உள்ளிட்ட 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 50 பேர் மீது வழக்குகளை நாக்பூர் போலீஸார் பதிவு செய்துள்ளனர். இதில், விஎச்பி மற்றும் பஜ்ரங்தளம் மீதான புகாரிலும் அந்த அமைப்புகளின் 8 பேர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.