சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ள நிலையில், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என கோரியும் டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் டாஸ்மாக் நிறுவனத்தை மையப்படுத்தி அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை தொடர் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, மதுபான குடோன், அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த சோதனையின் முடிவில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது.
அதில், போக்குவரத்து தொடர்பான டெண்டர், மதுபான உரிமம், மதுபான ஆலைகள் அதிகாரிகளுக்கு வழங்கிய லஞ்சம், மதுபான டெண்டர், மதுபான கொள்முதல், ஊழியர்கள் பணிநியமனம் மற்றும் இடமாற்றம் போன்றவற்றில் வரிஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. குறிப்பாக பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ. 30 வரை கூடுதலாக பணம் வசூலித்தது தொடர்பான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும், போக்குவரத்துக்காக ஆண்டுதோறும் ரூ.100 கோடியை செலவிட்டு, கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான தொகை மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றத்தி்ல் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைகளுக்கு தடை கோரி டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், தமிழக அரசின் அனுமதியின்றி டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்தக் கூடாது என தடை விதிக்க வேண்டும். கடந்த மார்ச் 6 முதல் 8-ம் தேதி வரை நடைபெற்ற அமலாக்கத் துறையின் சோதனையையும், ஆவணங்கள் பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவி்க்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.