IPL 2025 DC: ஐபிஎல் 2025 தொடர் (Indian Premier League 2025) நாளை மறுதினம் (மார்ச் 22) தொடங்க இருக்கிறது. ரசிகர்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு அணியும் பெரும் ஆர்வமுடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருக்கின்றனர். ஏனென்றால் ஐபிஎல் மெகா ஏலத்தால் அனைத்து அணிகளிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. புதிய காம்பினேஷன் வருவதால் எந்தெந்த அணி எப்படியெல்லாம் செயல்படும் என்பதை இப்போதே கணிப்பது அரிது எனலாம்.
IPL 2025 DC: டெல்லியின் கேப்டன், துணை கேப்டன்
இருப்பினும், சில அணிகளை பார்க்கும்போதே பயம் வரும். அதாவது, ஐபிஎல் மெகா ஏலத்தில் நல்ல வீரர்கள நல்ல தொகையில் வாங்கி, சிறப்பான காம்பினேஷனை அமைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட அபாயகரமான அணியாக டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals) அணி தோற்றமளிக்கிறது. புதிய கேப்டனாக இந்திய ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டன் பொறுப்பு அனுபவமிக்க தென்னாப்பிரிக்க வீரர் ஃபாப் டூ பிளெசிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
IPL 2025 DC: இரண்டு ஹோம் மைதானங்கள்
டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடந்தாண்டை போல இந்தாண்டும் விசாகப்பட்டினம் மற்றும் டெல்லி ஆகிய இரண்டு இடங்களை ஹோம் கிரவுண்டுகளாக கொண்டு விளையாடுகின்றன. விசாகப்பட்டினத்தில் 2 போட்டிகள், டெல்லியில் 5 போட்டிகள் மற்றும் மற்ற 7 மைதானங்களில் தலா 1 போட்டியை டெல்லி விளையாட இருக்கிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் விளையாடக்கூடிய அளவில் டெல்லி அணி பிளேயிங் லெவனை கட்டமைக்க வேண்டும்.
IPL 2025 DC: டெல்லி அணியின் டாப் ஆர்டரில் யார் யார்?
இதனாலும், துணை கேப்டன் ஃபாப் டூ பிளெசிஸ் உடன் ஜேக் பிரேசர் மெக்கர்க் நிச்சயம் களமிறக்கப்படுவார். அவர் கடந்த தொடரில் டெல்லி அணிக்கு பெரிய நம்பிக்கையை அளித்திருந்தாலும், ஐபிஎல் தொடருக்கு வெளியே அவர் பெரியளவில் சோபிக்கவில்லை. இருப்பினும் அவருக்கு ஒரு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் எனலாம். நம்பர் 3இல் கருண் நாயருக்கு பெரியளவில் வாய்ப்பிருக்கிறது. உள்ளூர் தொடர்களில் இந்தாண்டு கருண் நாயர் உச்சபட்ச ஃபார்மில் இருந்தது யாராலும் மறக்கவும், மறுக்கவும் முடியாது. நம்பர் 4, நம்பர் 5இல் கேஎல் ராகுல், ஸ்டப்ஸ் இறங்குவார்கள்.
IPL 2025 DC: டெல்லியின் பின்வரிசை வீரர்கள்
இதையடுத்து, அக்சர் பட்டேல் மற்றும் அஷூடோஷ் சர்மா பின்வரிசை பேட்டராக இறங்குவார்கள். இதையடுத்து, குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், மோகித் சர்மா ஆகியோரை பிளேயிங் லெவனில் எடுப்பார்கள். நடராஜனை இம்பாக்ட் வீரராக களமிறக்க வாய்ப்புள்ளது.
IPL 2025 DC: டெல்லியின் பேக்அப் வீரர்கள்
இதில், ஜேக் பிரேசர் மெக்கர்க் அல்லது கருண் நாயர் ஆகியோரில் ஒருவர் சரியாக விளையாடாவிட்டால் அபிஷேக் போரெலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். கீழ்வரிசையில் டொனொவன் ஃபெரேரா வாய்ப்பு கிடைக்கலாம். அஷுடோஷ் சர்மாவுக்கு மாற்று வீரராக சமீர் ரிஸ்வி, தர்ஷன் நல்கண்டே ஆகியோர் இருக்கின்றனர். வேகப்பந்துவீச்சில் துஷ்மந்தா சமீராவும் இருக்கிறார். எனவே, பேட்டிங், பந்துவீச்சு மட்டுமின்றி பேக்அப் வீரர்கள் கணக்கச்சிதமாக இருப்பதால் இந்த அணியே ஐபிஎல் தொடரில் மிகவும் அபாயகரமான அணியாக தோற்றமளிக்கிறது.