வேளாண் பட்ஜெட், மின்சாரம், சுகாதாரத்துறை குறித்து அதிமுக உறுப்பினர், அமைச்சர்கள் பேரவையில் காரசார விவாதம்

சட்டப்பேரவை வேளாண் பட்ஜெட், மின்சாரம், சுகாதாரத்துறை குறித்து அதிமுக உறுப்பினர், அமைச்சர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. விவாதத்தை தொடங்கி வைத்து அதிமுக உறுப்பினர் ஏ.பி.ஜெயசங்கரன் பேசுகையில், ‘‘5-வது முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. எந்த புதிய திட்டங்கள், விவசாயம் செழிக்கவோ, விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படவும் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை’’ என்றார்.

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: விவசாயிகளின் கருத்துகளை கேட்டு தான் வேளாண் பட்ஜெட் போடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி பாராட்டுவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. விவசாயிகள் பாராட்டுகின்றனர். புதிய திட்டங்களை சொல்லி, அதனை கொண்டு வருமாறு சொன்னால், அது ஆரோக்கியமாக இருக்கும்.

ஏ.பி.ஜெயசங்கரன்: பால் உற்பத்தி தொழில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. ஒரு லிட்டர் பாலின் உற்பத்தி செலவு ரூ.36 ஆகிறது என்று பால் விவசாயிகள் சொல்கின்றனர். ஆனால், அவர்களுக்கு அரசு ரூ.30 மட்டுமே கொடுத்து, ஊக்கத்தொகையாக ரூ.3 கொடுப்பதாக பால் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக ரூ.50 வழங்கினால், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்: கடந்த ஆட்சி காலத்தைவிட இந்த ஆட்சியில் 11 லட்சம் லிட்டர் பால் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. பால் வாங்குபவரும் ஏழை. பால் உற்பத்தியாளரும் ஏழை. நாங்கள் கொள்முதல் விலையை ஏற்ற மாட்டோம்.

ஏ.பி.ஜெயசங்கரன்: எங்கள் ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை தான் பெயர்களை மாற்றி செயல்படுத்துகிறீர்கள். அப்படி பெயர்களை மாற்றியது தான் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம். பெயர் மாற்றம் செய்து ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தவிர விவசாயிகளுக்கு எதுவும் இல்லை.

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்: அதிமுக உறுப்பினர் பேசும்போது, அவர்களின் அரசு கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ரத்து செய்து ஸ்டிக்கர் ஒட்டி பல்வேறு திட்டங்களை பெயர் மாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கிறார். திமுக ஆட்சியில் விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் கொடுத்ததை அதிமுக அரசு ரத்து செய்தது. உழவர் சந்தைக்கு கொண்டு வரப்படும் காய்கறிகளுக்கு பேருந்துகளில் வழங்கப்பட்ட கட்டணமில்லா சலுகையை ரத்து செய்தது மட்டுமின்றி, உழவர் சந்தையை சிதிலமடைய செய்தது அதிமுக அரசு.

ஏ.பி.ஜெயசங்கரன்: மின்சாரத்துறையில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், பணிகள் நடைபெறுவதில்லை.

மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி: எங்கள் பகுதி மின்சார வாரியத்தில் காலியாகவுள்ள பணியிடங்கள், மிக முக்கிய பணியிடங்கள் துறையின் சார்பில் கணக்கெடுத்து நிர்வாக அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. சில பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏ.பி.ஜெயசங்கரன்: ஆத்தூர் அரசு மருத்துவமனையில் விபத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் இல்லாததால், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சொல்கிறார்கள்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: தமிழகத்தில் மருத்துவர் காலிப்பணியிடங்கள் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் உள்ளனர். மேல் சிகிச்சைக்கு தான் ஆத்தூரில் இருந்து சேலத்துக்கு அனுப்பி வைப்பார்கள். அனைவரையும் சேலத்துக்கு அனுப்புவதில்லை.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.