சென்னை: நீதித்துறை குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமானுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு ஆய்வு மனுவில், எழும்பூர் நீதிமன்ற ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், நீதித் துறையையும், நீதிமன்ற செயல்பாடுகளையும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து பேசியதாகக் கூறி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதையடுத்து அந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி சார்லஸ் அலெக்ஸாண்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையில் கண்ணியமாகவும், நாகரிகமாகவும் இருக்க வேண்டும். ஆனால் நீதித் துறை குறித்த அவரது பேச்சு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக இருப்பதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் தள்ளுபடி செய்த எழும்பூர் நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சுகேந்திரன் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, எழும்பூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.16-க்கு தள்ளி வைத்துள்ளார்.