உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 118-வது இடத்தில் உள்ளது.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஐ.நா. சபை, அமெரிக்காவின் முன்னணி கருத்து கணிப்பு நிறுவனமான கேலப் ஆகியவை இணைந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.
ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறை, சுதந்திரம், தானம், ஊழல் ஆகியவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 147 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதில் பின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து ஆகியவை 2-ம், 3-ம் இடங்களைப் பெற்றுள்ளன. ஸ்வீடன், நெதர்லாந்து, கோஸ்டா ரிகா, நார்வே, இஸ்ரேல், லக்சம்பர்க், மெக்ஸிகோ ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
ஆஸ்திரேலியா 11, ஜெர்மனி 22, பிரிட்டன் 23, அமெரிக்கா 24, சிங்கப்பூர் 34, ஜப்பான் 55, மலேசியா 64, சீனா 68, நேபாளம் 92, பாகிஸ்தான் 109 ஆகிய இடங்களில் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 118-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை 133-வது இடத்திலும் வங்கதேசம் 134-வது இடத்திலும் உள்ளன. கடைசி 147-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் இருக்கிறது.
கருத்துக் கணிப்பு நடைமுறை: உலகம் முழுவதும் கருத்துக் கணிப்பை நடத்திய அமெரிக்காவின் கேலப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான் கிளிப்டன் கூறியதாவது: பணம், செழிப்பு மட்டுமே மக்களுக்கு மகிழ்ச்சியை தருவது கிடையாது. அன்பு, அரவணைப்பு, நம்பிக்கை உள்ளிட்டவையே மக்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஒரு நாடு, ஒரு சமுதாயம் எந்த அளவுக்கு மக்களை அரவணைக்கிறது, பாதுகாக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டே கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இஸ்ரேலில் தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகிறது. ஆனாலும் அந்த நாட்டு மக்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக உள்ளனர். இஸ்ரேலில் சமுதாய ஒற்றுமை அதிகமாக இருக்கிறது. இதன்காரணமாகவே மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இஸ்ரேல் 8-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதேபோல ஐரோப்பிய நாடுகளில் அன்பும், அரவணைப்பும் அதிகமாக இருக்கிறது. இதனால் அந்த நாடுகள் முதல் 20 இடங்களில் உள்ளன. இவ்வாறு கேலப் தலைமை செயல் அதிகாரி ஜான் கிளிப்டன் தெரிவித்தார்