சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் எதிர்குரலை ஒடுக்கும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு அமலாக்க துறை துணை போகின்றது என எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “அரசியல் பழிவாங்கும் மத்திய அரசின் ஏவல் கருவியாக மாறிப்போயுள்ள அமலாக்க துறை, மக்கள் விரோத மத்திய ஆட்சிக்கு எதிரான எஸ்டிபிஐ கட்சியின் எதிர்குரலை ஒடுக்கும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு துணை போகின்றது. ஏற்கனவே, அமலாக்க துறையின் பல்வேறு நடவடிக்கைகளை உச்சநீதிமன்றமும் மற்றும் உயர்நீதிமன்றமும் கேள்விக்குட்படுத்தியுள்ளன.
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஸியின் கைது நடவடிக்கை, கட்சி அலுவலகங்களில் சோதனை போன்ற அஸ்திரங்களை மேற்கொண்ட போதும், ஒருபோதும் ஆட்சியாளர்களுக்கு தலைவணங்காத, எஸ்டிபிஐ கட்சியின் உறுதியை குலைக்க முடியாத நிலையில், மேட்டுப்பாளையத்தில் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ராசிக் வீட்டில் சோதனை என்கிற நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. இந்த சோதனையில் எவ்வித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. அமலாக்க துறையும் எதையும் கைப்பற்றவில்லை என கூறியுள்ளது.
இதேபோல் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறையின் மற்றொரு சோதனை நடவடிக்கையில் வாஹித் ரகுமான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர் இல்லை. ஆனால், ஊடகங்களில் எஸ்டிபிஐ நிர்வாகி கைது என தவறாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆகவே, எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி கைது என செய்தி வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.