நீங்கள் ஏமாறாமல் இருந்தால், எங்கள் வாழ்த்துக்கள் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் தங்கமணிக்கு மடிகணினி குறித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது அவரக்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
எங்களோடு நீங்கள் அரசியல் களத்தில் நீண்டகாலமாக களமாடி வருகிறீர்கள். கொள்கையில் மாறுபட்டிருந்தாலும், இயக்கப்பற்றின் காரணமாக அரசியல் களத்திலே களமாடக்கூடிய தொண்டர்களும் உள்ளனர் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. அரசியல் பயணத்தில் உங்களோடு லட்சக்கணக்கான தொண்டர்கள் இங்கே இணைந்து பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், தங்கமணி கூட்டல், கழித்தல் கணக்கை இங்கே போட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால், உங்களுடைய கூட்டல், கழித்தல் கணக்கை எல்லாம், வேறோர் இடத்தில் உட்கார்ந்து இன்னொருவர்கள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அதுவும் வேறு எங்கோ ஒருவர் உட்கார்ந்து, உங்களுடைய தொண்டர்களுடைய எதிர்காலம், உங்களுடைய அனுதாபிகளுடைய எதிர்காலத்தை எல்லாம் காலத்திலே நீர்த்துப் போகச் செய்யக்கூடிய அளவுக்கு சாணக்கிய தந்திரத்தோடு, இந்த கணக்குகளை சிலர் எங்கோ உட்கார்ந்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மடிக்கணினி விவகாரத்தில் சற்று கவனக்குறைவாக நீங்கள் இருந்து விட்டதைப்போல, உங்கள் மடியிலே இருக்கக்கூடிய கனத்தை பறித்துக் கொள்ள நினைப்பவர்களிடமிருந்தும் நீங்கள் அனைவரும் சற்று கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி, ‘‘எங்களுக்கு என்று கொள்கை உள்ளது. எங்களது தலைவர் உள்ளார். சாதாரண கிராமத்தில் இருந்து வந்த அவர், இந்த அளவுக்கு இயக்கத்தை வலிமையுடன் நடத்திக் கொண்டிருக்கிறார். எந்த கூட்டல் கணக்கிலும் நாங்கள் ஏமாற மாட்டோம்’’ என்றார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,‘‘ நீங்கள் ஏமாறாமல் இருந்தால் எங்கள் வாழ்த்துக்கள்’’ என்றார்.