அலிகார்,
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் குவாசி படா பகுதியில், 2 குழுவினர் கிரிக்கெட் விளையாடினர். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களான அனாஸ் மற்றும் மோசின் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சிலர் தலையிட்டு தகராறை தீர்த்து வைத்தனர்.
நேற்று முன்தினம் இரவில் மீண்டும் அவர்களுக்குள் அது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாக குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் களமிறங்கியதால், அது கோஷ்டி மோதலாக உருவெடுத்தது. கடைசியில் வாக்குவாதம் வன்முறையாக வெடித்தது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். சிலர் துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிகிறது. கல்வீச்சு, கைகலப்பு மோதலில் 2 பெண்கள் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.