பிரபல இந்திய ஓவியர் எம்.எப்.ஹூசைனின் ஓவியங்கள் ரூ.119 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிராவின் பண்டர்பூரை சேர்ந்தவர் எம்.எப்.ஹூசைன். கடந்த 1915-ம் ஆண்டு பிறந்த இவர் 2011-ம் ஆண்டில் மறைந்தார். இந்தியாவின் பிகாசோ என போற்றப்படும் அவர் தனது வாழ்நாளில் சுமார் 60,000-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்தார். அவரது சில ஓவியங்கள் மட்டும் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தின.
கடந்த 1954-ம் ஆண்டில் கிராமங்களை அடிப்படையாகக் கொண்டு எம்.எப்.ஹூசைன் வரைந்த ஓவியங்கள் டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன. உலக சுகாதார அமைப்பு சார்பில் டெல்லியில் பணியாற்றிய நார்வே நாட்டை சேர்ந்த மருத்துவர் லியான் கடந்த 1954-ம் ஆண்டில் ஹூசைனின் ஓவியங்களை ரூ.1,400-க்கு வாங்கினார்.
பின்னர் நார்வே நாட்டுக்கு திரும்பிய லியான், ஓஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஓவியங்களை தானமாக வழங்கினார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனத்துக்கு எம்.எப்.ஹூசைனின் ஓவியங்கள் கிடைத்தன. இந்த ஓவியங்கள் நேற்று முன்தினம் ஏலத்தில் விடப்பட்டன. அப்போது ரூ.119 கோடிக்கு எம்.எப்.ஹூசைனின் ஓவியங்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டன.
கடந்த 2023-ம் ஆண்டு மும்பையில் நடந்த ஏலத்தில் இந்திய பெண் ஓவியர் அமிர்தா ஷெர் கில் வரைந்த ஓவியம் ரூ.61.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த சாதனையை எம்.எப்.ஹூசைனின் ஓவியங்கள் முறியடித்து உள்ளன.
கிரண் நாடார் ஏலம் எடுத்தார்: தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடாரின் மனைவி கிரண் நாடார், எம்.எப்.ஹூசைனின் ஓவியங்களை ரூ.119 கோடிக்கு ஏலம் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் டெல்லியில் கிரண் நாடார் கலை அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறார். எம்.எப்.ஹூசைனின் ஓவியங்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிகிறது.