சென்னை: துரித உணவுகளை சாப்பிட்டால் பசியே இருக்காது என்றும், பீட்சா, பர்கர் போன்றவற்றை தொடர்ச்சியாக சாப்பிட்டால் மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும் எனவும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் எச்சரித்துள்ளார்.
தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், செறிவூட்டப்பட்ட சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தெருக்கூத்து வடிவில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, உணவுப் பாதுகாப்புத் துறை சென்னை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
துரித உணவுகள் மற்றும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், நெஞ்சுவலி உள்ளிட்ட பாதிப்புகள் குறித்தும், சிறுதானிய உணவுகளின் தன்மை மற்றும் பயன்கள் குறித்தும் தெருக்கூத்து மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.
தற்போது சிறுதானியத்தின் சிறப்பம்சங்கள் பலருக்கும் தெரிவதில்லை. சிறுதானியத்தை மக்கள் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். அதை அடையும் நோக்குடன், தொடர்ச்சியாக மக்கள் கூடும் இடங்களான பெசன்ட் நகர் கடற்கரை, மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தெருக்கூத்து நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
பீட்சா, பர்கர், சிப்ஸ், ப்ஃரென்சு பிரைஸ் போன்ற துரித உணவுகளை சாப்பிடும்போது நமக்கு பசியே இருக்காது. அதில் பாலாடைக்கட்டி (சீஸ்), வெண்ணெய், பொறித்த உருளைக்கிழங்குகள் அதிக அளவில் இருப்பதால் அதிக கலோரிகள் கிடைக்கின்றன. இதனால் நம் உடலுக்கு உபாதைகள் ஏற்படும். துரித உணவுகளை நான் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. மாதத்துக்கு ஒருமுறை மட்டும் அவற்றை எடுத்துக்கொண்டால் பரவாயில்லை.
ஆனால், தொடர்ச்சியாக பீட்சா, பர்கர் சாப்பிட்டால் கண்டிப்பாக நாம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருக்கும். காலம் முழுவதும் நோய் தொற்றோடுதான் இருப்போம். அதற்கு பதிலாகத்தான் சிறுதானிய உணவு வகைகளை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.