பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அடுத்த சில மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதாக உறுதி செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தொலைத் தொடர்பு துறையில் பெரிய மாற்றம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில், 5ஜி சேவை தொடங்குவதன் மூலம் தனியார் நிறுவனங்களை விட BSNL மலிவான கட்டணத்தில், அதி வேக இணைய சேவையை வழங்கும்.
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஏற்கனவே டெல்லியில் 5ஜி (5G SA) சோதனை செய்து வருகிறது. BSNL, சில தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து Network-as-a-Service (NaaS) மாதிரியின் கீழ் 5G நெட்வொர்க் வழங்கும் பணியை துரிதபடுத்தியுள்ளது . இப்போது நிறுவனம் இந்த நடவடிக்கையை மற்ற நகரங்களிலும் விரிவிபடுத்தி, 5G சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. BSNL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (CMD) ராபர்ட் ரவி இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
BSNL CMD வெளியிட்டுள்ள தகவல்
பிஎஸ்என்எல் சிஎம்டி ராபர்ட் ரவி கூறுகையில், ‘நாங்கள் Network-as-a-Service (NaaS)மூலம் டெல்லியில் 5ஜி நெட்வொர்க்கைத் தொடங்கிய நிலையில், இப்போது அதை விரைவாக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். சில நகரங்களைத் தேர்ந்தெடுத்து அடுத்த சில மாதங்களில் 5ஜி சேவையைத் தொடங்க முயற்சிக்கிறோம். இதுவே எங்களின் இலக்கு என்றார். எனினும், இது தொடர்பான வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.
இந்தியா முழுவதும் 1 லட்சம் 4ஜி டவர்கள்
தற்போது பிஎஸ்என்எல் இந்தியா முழுவதும் 1 லட்சம் 4ஜி டவர்களை நிறுவுவதில் கவனம் செலுத்தி வருகிறது. நிறுவனம் இதுவரை 80,000 க்கும் மேற்பட்ட டவர்களை நிறுவியுள்ளது, அவற்றில் சுமார் 75,000 டவர்கள் செயலில் உள்ளன. BSNL 2025 ஜூன் மாதத்திற்குள் 1 லட்சம் 4G டவர்களை நிறுவி முடிக்க இலக்கு வைத்துள்ளது. இதன் பிறகு நிறுவனம் 5G சேவைகளை தொடங்கும்.
4ஜி சேவையை விரிவுபடுத்தவும் நடவடிக்கை
பிஎஸ்என்எல் 5ஜியுடன் 4ஜி சேவையை விரிவுபடுத்தும் என்று தொலைத்தொடர்பு துறை வல்லுநர்கள் நம்புகின்றனர். BSNL TCS தலைமையிலான கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறது. 4ஜியை விரிவுபடுத்துதற்கான பணிகளில் C-DoT (டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம்) மற்றும் தேஜாஸ் நெட்வொர்க்குகள் ஆகியவை இணைந்துள்ளன. BSNL 1 லட்சம் 4G டவர்களை நிறுவியவுடன், இந்த பணியை மேலும் விரிவுபடுத்த ஆர்டர் செய்யலாம் என்று TCS (Tata Consultancy Services) ஏற்கனவே கூறியுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களும் 5ஜி வாய்ப்பைப் பெறலாம்
BSNL தனது 5G தளங்களில் 50% வெளிநாட்டு விற்பனையாளர்களுக்கு ஒதுக்கலாம் என்று அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. சில சர்வதேச நிறுவனங்களும் பிஎஸ்என்எல்லின் 5ஜி நெட்வொர்க்கில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறலாம்.
ஜியோ-ஏர்டெல்லை விட மலிவாக கட்டணத்தில் அதிவேக இணைய சேவை
மலிவான கட்டணத்தில், அதிவேக இணையத்தை விரும்புபவர்களுக்கு, BSNL 5G சேவை சிறந்த தேர்வாக இருக்கும். தனியார் நிறுவனங்கள் தங்கள் போஸ்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணங்களின் விலைகளை அதிகரித்து வரும் நிலையில், BSNL ஏற்கனவே மலிவான திட்டங்களை வழங்குகிறது. எனவே, பிஎஸ்என்எல்லின் 5ஜி சேவைக்கான குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | வாட்ஸ்அப் கால் மூலம் மிரட்டல்…. ரூ.57 லட்சத்தை இழந்த முதியவர்… மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?