நெல்லையின் மூத்த அரசியல்வாதியும் அ.தி.மு.க அமைப்புச் செயலாளராக இருந்தவருமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, ஆகியோரிடம் மட்டுமல்லாமல் தற்போதைய முதல்வர் ஸ்டாலினுடனும் நெருக்கமாக பழகியவர். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் அரசியல் பிரவேசம் குறித்த ஒரு பயோ இதோ!
எம்.ஜி.ஆர் விசுவாசி!
‘நெல்லை நெப்போலியன்’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட ‘கானா’ என்கிற கருப்பசாமி பாண்டியன், சிறு வயது முதலாகவே எம்.ஜி.ஆர் மீது தீவிர அன்பு கொண்டிருந்தார். 1972-ல் எம்.ஜி.ஆர் தி.மு.க-வில் இருந்து வெளியேறி அ.தி.மு.க-வைத் தொடங்கியபோது, அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாக கட்சியை வளர்க்கப்பாடுபட்டார். கானா-வின் வேகமான செயல்பாடு பற்றி எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது. 1977 சட்டமன்றத் தேர்தலின்போது கட்சியினர் பலரும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமா என எதிர்பார்த்து, கட்சித் தலைமையிடம் விருப்பமனு கொடுத்துவிட்டுக் காத்திருந்தார்கள்.

அந்த சமயத்தில் 25 வயது நிரம்பிய இளைஞரான கருப்பசாமி பாண்டியன் எந்த தொகுதிக்கும் விருப்பம் மனு கொடுக்கவில்லை. நெல்லை மாவட்டத்தின் விருப்பமனுப் பட்டியலை பரிசீலித்த எம்.ஜி.ஆர்., அதில் கருப்பசாமி பாண்டியன் பெயர் இல்லாததைக் கண்டார். ஏற்கெனவே அவரது செயல்பாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த அவர், உடனடியாக கருப்பசாமி பாண்டியனை சென்னைக்கு வரவழைத்தார். அவரிடம் கையெழுத்து பெற்று, ‘ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் நீதான் போட்டியிடப் போகிறாய். போய் தேர்தல் வேலைகளைக் கவனி’ என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளார். எம்.ஜி.ஆரின் இந்த குணத்தை எப்போதும் சொல்லி நெகிழ்வார், கருப்பசாமி பாண்டியன். அதே போல,ஆலங்குளம் தொகுதியில் அவருக்காக எம்.ஜி.ஆர் நேரில் வந்து பிரசாரம் செய்தார். அவரது பிரசாரம் மற்றும் அந்தத் தொகுதி மக்களிடம் எம்.ஜி.ஆருக்கு இருந்த செல்வாக்கு காரணமாக கருப்பசாமி பாண்டியன் சுலபமாக வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக மாறினார். குறிப்பாகத் தென் மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் கருப்பசாமி பாண்டியன், எம்.ஜி.ஆரின் காரிலேயே பயணிக்கும் அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டது.
கோவப்பட்ட கானா.. சமாளித்த எம்.ஜி.ஆர்!
நெல்லை சட்டமன்றத் தொகுதிக்கு 1986-ம் ஆண்டு இடைத்தேர்தல் வந்தது அப்போது அ.தி.முக-வின் ஒன்றுபட்ட மாவட்டச் செயலாளராக இருந்த ‘கானா அண்ணாச்சி’க்குப் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் எனக் கட்சியினர் அனைவரும் எதிர்பார்த்தனர். அவருக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் எம்.ஜி.ஆர் ஒரு திருப்பத்தை அறிவித்தார். அந்த சமயத்தில் எம்.எல்.சி பதவி பறிக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த ஆர்.எம்.வீரப்பனை சமாளிக்கும் வகையில் நெல்லை சட்டமன்ற இடைத்தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தார். இது ‘கானா’வை மிகவும் பாதித்தது. அதனால் அவர் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். இந்தத் தகவல் எம்.ஜி.ஆர் காதுக்குச் சென்றது.

ஆர்.எம்.வீரப்பனுக்காக நெல்லைக்கு பிரசாரம் செய்யத் தயாராக இருந்த எம்.ஜி.ஆர், சென்னையில் இருந்தபடியே கட்சிப் பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்தார். அதில், “நெல்லைக்குச் செல்லும் எனது பிரசார பயணங்கள் அனைத்தையும் கருப்பசாமி பாண்டியனே ஒருங்கிணைப்பார்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தைப் பார்த்ததும் நெகிழ்ந்துபோன கருப்பசாமி பாண்டியன், முன்பை விடவும் தீவிரமாகத் தேர்தல் பணியாற்றினார். எம்.ஜி.ஆர் வந்தபோதும் அவருக்கான பயணத் திட்டங்களை வகுத்து பிரசாரத்தை வேகப்படுத்தினார். அதனால் அந்த இடைத்தேர்தலில் ஆர்.எம்.வீரப்பனுக்கு வெற்றி எளிதாகக் கிடைத்தது.
அன்றே கூவத்தூர் பாணி அரசியல்!
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவது தொடர்பாக ஜானகி எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இடையே போட்டி ஏற்பட்டபோது அ.தி.மு.க எம்.எல்.ஏ-களில் 28 பேர் ஜெயலலிதா பக்கம் இருந்தனர். அவர்களைப் பாதுகாப்பாக வைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது கருப்பசாமி பாண்டியன் உதவியை ஜெயலலிதா கோரினார். அதையேற்று அந்த எம்.எல்.ஏக்களை ராஜஸ்தான் மாநிலத்துக்கு ‘சுற்றுலா’ அழைத்துச்சென்ற கருப்பசாமி பாண்டியன், பின்னர் அவர்களைச் சென்னைக்கு அழைத்துவருவதாக இருந்தது. அப்போது அவர்களை எதிர்த்தரப்பினர் கைப்பற்றும் ஆபத்து இருப்பதைக் கேள்விப்பட்ட கருப்பசாமி பாண்டியன், தன்னுடன் இருந்த எம்.எல்.ஏ-களை சென்னையில் இறக்காமல் நேராக திருவனந்தபுரம் அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து அவர்களை நெல்லை வழியாக சாத்தூர் அழைத்துச் சென்றார். அங்கு கே.கே எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்குச் சொந்தமான மில் வளாகத்தில் ரகசியமாகத் தங்க வைத்துப் பாதுகாத்தார். அதன் பின்னர் இரு தரப்பினரும் ஒன்றான நிலையில், கருப்பசாமி பாண்டியனுக்கு அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை வழங்கி கௌரவித்தார், ஜெயலலிதா.

அந்தக் காலகட்டத்தில் நெல்லையில் அ.தி.மு.க-வின் பிரமாண்டமான மாநாட்டை ஏற்பாடு செய்து ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் பெற்றார். ஆனாலும் அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் 2000 ஆண்டில் அவரை ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கினார். அதன் பின்னர் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் தி.மு.க-வில் இணைந்து செயல்பட்டார்.

தென்காசி சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பாகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்வானார். அவருக்கு தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் அ.தி.மு.க-வில் இருந்த காலத்திலும் சரி, தி.மு.க-வில் இருந்தபோதும் கட்சியைக் கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார். அரசியலில் அனைவரையும் அரவணைத்துச்செல்வது அவரது பாணி. அதே சமயம் கட்சிக்கு எதிராகச் செயல்படுவோரைக் கண்டிக்கவும் தவறுவதில்லை.
நெல்லை மாவட்ட தி.மு.க-வை கட்சித் தலைமை, நிர்வாக வசதிக்காக கிழக்கு, மத்திய மாவட்டம் என இரண்டாகப் பிரிக்க முடிவுசெய்தது. அதில், கருப்பசாமி பாண்டியனுக்கு துளியும் விருப்பம் கிடையாது. ஆனாலும் அவரை கருத்தை மீறி மாவட்டத்தைப் பிரித்ததால் அதிருப்தியடைந்த அவர், ஒன்றிணைந்த மாவட்டச் செயலாளராக இருந்த தன்னால் ஒரு சில சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட குறுகிய பிரிவில் செயல்பட முடியாது என்றார். அதை, “மாவட்ட கலெக்டராக இருந்த நான் தாசில்தாராக செயல்பட விரும்பவில்லை” என்று கட்சித் தலைமைக்குத் தெரிவித்ததோடு, உள்கட்சித் தேர்தலில் போட்டியிடாமல் ஒருங்கினார். அந்த விவகாரம் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து 2015 மே மாதம் அவர் தி.மு.க-வில் இருந்து விலகினார். பின்னர் ஜெயலலிதாவை சந்தித்து மீண்டும் தன்னை தாய்க்கழகத்தில் இணைத்துக் கொண்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீவிர அரசியலில் இறங்கினார். அவருக்கு அமைப்புச் செயலாளார் பொறுப்பு வழங்கப்பட்டது.

கட்சி சார்பாக நடக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என எதுவாக இருந்தாலும் முதல் ஆளாக வந்து பங்கேற்பார் என்பதைக் கட்சியினர் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். 76 வயது நிரம்பிய அவர் முதுமை காரணமாக உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார். கடந்த வாரம் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு மனையும் ஆறு குழந்தைகளும் உள்ளனர். அ.தி.மு.க மற்றும் தி.மு.க என்கிற இருபெரும் கட்சிகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிகரில்லா தலைவராக நெல்லை மாவட்ட அரசியலில் கோலோச்சிய கானா என்கிற கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.