ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் உள்பட பல்வேறு தேர்வுகளுக்கு பயிற்சி கொடுக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் ராஜஸ்தானில் தங்கி தேர்வுக்கு பயிற்சி செய்து வருகின்றனர். ஆனால், தேர்வு அழுத்தம் காரணமாக பல மாணவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தை சேர்ந்த ஹர்ஷ்ராஜ் சங்கர் (வயது 17) என்ற மாணவன் ராஜஸ்தானின் கோட்டா மாவட்டம் ஜவகர் நகரில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெற்று வந்தான்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கோட்டாவில் தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த சங்கர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். தங்கி இருந்த ஓட்டல் அறையில் சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.
தகவலறிந்து வந்த போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பயிற்சிக்கு வந்து கோட்டா மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.