‘பாஜக – அதிமுக கூட்டணிக்கான நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது’ – முத்தரசன் கருத்து

சேலம்: “எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, அதிமுக நிர்வாகிகளோடு டெல்லி சென்றார். உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை சந்தித்து நீண்ட நேரம் பேசியிருக்கிறார். அதாவது கூட்டணிக்கான நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. திருமணம் எப்போது என்றுதான் தெரியவில்லை” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட மாநாடு சேலத்தில் இன்று (மார்ச் 26) நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்திருந்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மும்மொழிக் கொள்கையால் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே அறிவிக்கப்படாத போர் நடந்து கொண்டுள்ளது. ஆனால், இது தனிப்பட்ட கட்சியின் பிரச்சினை அல்ல. தேசநலன் தொடர்புடையது. நாட்டின் அரசியலமைப்பில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அனைத்து மொழிகளையும் சமமாக பாவிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. மக்களால் பேசப்படாத சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு அதிக நிதியும், செம்மொழியான தமிழின் வளர்ச்சிக்கு குறைந்த நிதியும் ஒதுக்கப்படுகிறது. இதுபோன்ற செயலை கைவிட வேண்டும். மத்திய அரசு, தேசிய கல்விக் கொள்கையை திணிக்க முயற்சிக்கிறது. தேசிய கல்விக் கொள்கை, நாடாளுமன்றத்தில் விவாதித்து கொண்டு வரப்பட்டது அல்ல.

இதில் மொழி மட்டும் பிரச்சினையாக இருக்கவில்லை. அதில் கொண்டு வரப்பட்டுள்ள தேர்வு முறை மிகக்கடினமானது. இதனால், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனால், தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது. மும்மொழிக் கொள்கையை, தமிழகத்தில் பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஏற்கவில்லை. 3-வது மொழியாக, இந்தி இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல, ஏதாவது ஒரு மொழி இருக்கலாம் என்கிறார்கள்.

இந்தி பேசும் மக்கள் இருக்கும் மாநிலங்களின் பள்ளிகளில் ஒரு மொழிதான் அதிகமாக இருக்கிறது. ஒரு சில மாநிலங்களில் 2 மொழிகள் உள்ளன. எந்த மாநிலத்திலும் 3 மொழிகள் இல்லை. ஆனால், மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழகத்துக்கு கல்வி நிதியைக் கொடுக்க மறுக்கின்றனர். மக்கள் தொகை அடிப்படையில், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்வதை தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளுமே எதிர்க்கின்றன.

ஆனால், பாஜக-வும் அண்ணாமலையும், தொகுதி மறுசீரமைப்பு குறித்து அறிவிக்கப்படவில்லை, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்று கூறுகின்றனர். ஆனால், நாடாளுமன்றத்தை கட்டும்போதே 543 இருக்கைகளுக்குப் பதிலாக, 848 இருக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு அமைத்துள்ளனர். அவர்கள் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ரூ,37 ஆயிரம் கோடி நிதி கேட்டபோது, மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் கூட தரவில்லை.

மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்துக்கும் நிதி தரவில்லை. எல்லாவற்றுக்கும் மத்திய அரசிடம் போராடும் நிலை தமிழகதுக்கு உள்ளது. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, அதிமுக நிர்வாகிகளோடு டெல்லி சென்றார். இரண்டு மாதங்களுக்கு முன்னரே டெல்லியில் திறக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்ப்பதற்காக டெல்லி சென்றதாக தெரிவித்தார். ஆனால், திடீரென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை சந்தித்து நீண்ட நேரம் பேசியிருக்கிறார். அதாவது கூட்டணிக்கான நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. திருமணம் எப்போது என்றுதான் தெரியவில்லை.

பாஜக-உடன் இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இப்போது, தமிழக பிரச்சினைகளைப் பற்றி அமித்ஷாவிடம் பேசியதாக தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கான பிரச்சினை என்று சொன்னால், ஒரு சில நிமிடங்கள் பேசிவிட்டு மனுவை வாங்கிக் கொண்டு அனுப்பி இருப்பார்கள். ஆனால், அவருக்கு என்ன நெருக்கடி என்று தெரியவில்லை. கோடநாடு பிரச்சினையா? வருமான வரி பிரச்சினையா? இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்சினையா? என எந்த நெருக்கடி என்று தெரியவில்லை.

அமலாக்கத்துறையையும், வருமான வரித்துறையும் பாஜக அரசு எப்படி பயன்படுத்தி வருகிறது என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். அமலாக்கத்துறையை உச்ச நீதிமன்றம் பலமுறை கண்டித்துள்ளது,” என்று அவர் கூறினார். இந்த பேட்டியின் போது, சேலம் மாவட்டச் செயலாளர் மோகன், மாநில செயற்குழு உறுப்பினர் ரவி உள்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.