புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தனக்கு நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பளிக்க மறுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மக்களவை நடைமுறைகள் ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் நடைபெறுகிறது, முக்கியமான பிரச்சினைகளை பேச நான் பலமுறை வாய்ப்பு கேட்டும் அவை மறுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “இங்கே என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பேச அனுதிக்குமாறு நான் அவருக்கு கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர் (சபாநாயகர்) வெளியேறிச் சென்றுவிட்டார். அவையை நடத்துவதற்கான வழி இது இல்லை. சபாநாயகர் என்னைப் பேச விடாமல் வெளியேறிவிட்டார். அவர் என்னைப் பற்றி ஆதாரமற்ற ஒன்றைச் சொன்னார். அவர் அவையை ஒத்திவைத்தார். அதற்கான தேவையில்லை.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிப்பது மரபு. நான் பேச எழும்போது எல்லாம், பேச விடாமல் தடுக்கப்பட்டேன். நான் எதுவும் செய்யவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தேன். இங்கு ஜனநாயகத்துக்கே இடம் இல்லை. நான் மகா கும்பமேளா பற்றி பேச விரும்பினேன், அதேபோல் வேலைவாய்ப்பின்மை பற்றியும் பேச விரும்பினேன். ஆனால் எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை.” என்று தெரிவித்தார்.
விதிகளை கடைபிடியுங்கள் – ஓம்பிர்லா: மக்களவையின் கண்ணியத்தை நிலைநிறுவத்துவதற்காக விதிகளை பின்பற்றுமாறு ராகுல் காந்தியை சபாநாயகர் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். என்றாலும் சபாநாயகர் ஏன் அவ்வாறு சொன்னார் என்பதற்கான காரணம் உடனடியாக தெரிவியவில்லை.
மக்களவையில் சபாநாயகர் பேசும்போது, “உறுப்பினர்கள் அவையின் மாண்பு மற்றும் கண்ணியத்தை காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அவையின் கண்ணியத்துக்கு எதிரான உறுப்பினர்களின் பல நடவடிக்கைகள் எனது கவனத்துக்கு வருகின்றது. அந்த அவையில், தந்தை – மகள், தாய் – மகள், கணவன் – மனைவி என பலர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.
இந்தச் சூழலில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் சபையில் உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகளைக் கூறும் விதி 349-ஐ கடைபிடிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் விதிகளின் படி நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்று தெரிவித்தார்.
சபாநாயகரைச் சந்தித்த காங். எம்.பி.கள்: இதனிடையே, மக்களவை துணைத்தலைவர் கவுரவ் கோகாய், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால், காங்கிரஸ் கட்சியின் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் உட்பட 70 காங்கிரஸ் எம்.பி.கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து, ராகுல் காந்திக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்த பிரச்சினையை எழுப்பியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.