பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே வயலாநல்லூரில் தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த ஒடிசா மாநில தொழிலாளர்கள் 48 பேரை அதிகாரிகள் மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள வயலாநல்லூர் பகுதியில் செயல்படும் தனியார் செங்கல்சூளையில் வடமாநில தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருவதாக மாவட்ட சட்ட உதவி மைய செயலாளர் நளினிதேவிக்கு இன்று (மார்ச் 26) புகார் வந்தது.
அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட சட்ட உதவி மைய செயலாளர் நளினிதேவி, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸாருடன் சம்பந்தப்பட்ட செங்கல் சூளையில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 48 பேர் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
அவர்களை மாவட்ட சட்ட உதவி மைய செயலாளர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டு, பாரிவாக்கத்தில் உள்ள சமுதாய நல மையத்தில் தங்கவைத்து விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் நபர் ஒருவருக்கு ரூ.35 ஆயிரம் வீதம் அளித்து செங்கல் சூளையில் பணிபுரிய அனுப்பியது தெரியவந்தது.
இவர்கள் செங்கல் சூளைக்கு பணிக்கு வந்தபிறகு கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு, வாரம் ரூ.200 மட்டும் சம்பளமாக கொடுக்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது. மீட்கப்பட்ட 48 பேரை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.