SRH vs LSG: பயமுறுத்தும் பேட்டிங்… அய்யோ பாவம் பௌலிங் – 300 ரன்களை எந்த அணி அடிக்கும்?

SRH vs LSG: ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கடந்த 4 நாள்களில் 5 போட்டிகள் நடைபெற்றுள்ளன. 10 அணிகளும் தற்போது தலா ஒரு போட்டியை விளையாடிவிட்டன. இந்த சூழலில், 5 போட்டிகளில் 3 போட்டிகளின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 200 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. அதிலும் 2 போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்யப்பட்டுள்ளது.

SRH vs LSG: ஹை-ஸ்கோரிங் போட்டிகள் 

இதன்மூலமே, பேட்டிங்கிற்கு தற்போதைய ஐபிஎல் சூழல் எந்தளவிற்கு சாதகமாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். குறுகிய பவுண்டரி அளவு, பனிப்பொழிவு, பேட்டின் அமைப்பு, ஆடுகளம் அமைப்பு ஆகியவை அனைத்தும் பேட்டர்களுக்கு சாதகமாகவே இருப்பதால் அனைத்து போட்டிகளும் ஹை-ஸ்கோரிங் போட்டிகளாக உள்ளது என கூறப்படுகிறது.

SRH vs LSG: ஹைதராபாத் மைதானம் மீதான விமர்சனங்கள்

இந்த சூழலில், ஐபிஎல் தொடரில் நாளை (மார்ச் 27) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஹைதராபாத் நகரில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இந்த மைதானத்தின் ஆடுகளத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி 286, 277 என பெரிய ஸ்கோர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆடுகளத்தின் மீது கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் இருக்கின்றன.

SRH vs LSG: ஹைதராபாத் பேட்டிங் vs லக்னோ பௌலிங் 

இது ஒருபுறம் இருக்க, லக்னோ அணியின் அனுபவமற்ற பந்துவீச்சை, அவர்களின் டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலேயே நாம் பார்த்தோம். அந்த வகையில், பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்கை, லக்னோவின் பந்துவீச்சு எப்படி தாக்குப்பிடிக்கப்போகிறது என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. 

டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அபினவ் மனோகர், அனிகீத் வர்மா, பாட் கம்மின்ஸ் என நம்பர் 8 வரை சிக்ஸர்கள் அடிக்கக் கூடிய பேட்டர்கள் இருக்கின்றனர். 

மறுபுறம் லக்னோ அணியில் ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், ஷாபாஸ் அகமது, திக்வேஷ் சிங், பிரின்ஸ் யாதவ், மணிமாறன் சித்தார்த் என பெரியளவு ஐபிஎல் அனுபவமில்லாத பலவீனமான பந்துவீச்சு படையே இருக்கிறது. ஆவேஷ் கான் காயத்தில் இருந்து மீண்டிருப்பதாக கூறப்படுவது லக்னோ அணிக்கு நல்ல செய்தியாகும்.

SRH vs LSG: 300 ரன்கள் தான் குறி 

ஒருவேளை, நாளை ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தால் நிச்சயம் 300 ரன்களையே குறிவைத்து களமிறங்கும் என தயங்காமல் சொல்லலாம். ராஜஸ்தான் உடன் இதே மைதானத்தில் கடந்த போட்டியில 286 ரன்கள் அடித்தும், ராஜஸ்தான் அணி 242 ரன்கள் வரை எடுத்ததை மறுக்க முடியாது. 

அதுவும் லக்னோ அணியில் மார்ஷ், மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், ஆயுஷ் பதோனி, ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது போன்றோர் இருப்பதால் இவர்களும் 250 ரன்களை சேஸ் செய்யும் திறன் கொண்டவர்கள்தான். எனவே, சன்ரைசர்ஸ் கூடுதலாக ரன் அடிப்பதே நலன் என யோசிக்கும். இருப்பினும், லக்னோவை விட அனுபவம் வாய்ந்த பந்துவீச்சு படையை ஹைதராபாத் அணி வைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

SRH vs LSG: 2 அணிகளும் முட்டிமோதும்

ஒருவேளை லக்னோ முதலில் பேட்டிங் செய்தாலும் தனது பந்துவீச்சை பலவீனத்தை மறைக்க 260 ரன்களை தாண்டி அடிக்க முடிவெடுக்கவும் வாய்ப்புள்ளது. எய்டன் மார்க்ரமிற்கு பதில் மேத்தியூ பிரீட்ஸ்கேவை லக்னோ அணி முயற்சித்து பார்க்கலாம். அவரும் அதிரடி ஓப்பனர்தான். இதனால், கடந்த போட்டியை விட இன்னும் அதிவேகமாக ரன் அடிக்க வாய்ப்புள்ளது. அதாவது, ஹைதராபாத் அணியோ, லக்னோ அணியோ யார் நாளை 300 ரன்களை அடிக்கப் போகிறார்கள் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் துயரம் தோய்ந்த கேள்வியாக இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.