புதுடெல்லி: தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் அதிமுக தலைவர்கள் டெல்லியில் நேற்று முன் தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசினர்.
அமித் ஷாவுடனான சந்திப்பில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி, மாநிலங்களவை எம்.பி.க்கள் டாக்டர் எம்.தம்பிதுரை, சி.வி. சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக பாஜக தலைவர் நட்டாவை தம்பிதுரை மட்டும் சந்தித்தார். இந்த சந்திப்புகளின் போது தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக மீண்டும் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக கட்சி வட்டாரங்கள் கூறின. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பாஜக தலைவர்கள் கூறும்போது, ‘‘ஒபிஎஸ், சசிகலா உள்ளிட்ட அதிருப்தி தலைவர்களையும் உடன் சேர்க்க அதிமுகவிடம் அறிவுறுத்தப்பட்டது. அவர்களுக்கு விருப்பம் இல்லாத இந்த சேர்க்கை குறித்து யோசிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அண்ணா விவகாரத்தில் அண்ணாமலை – அதிமுக தலைவர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் எடப்பாடி பழனிச்சாமி அவரை தவிர்க்கிறார்.
இதனால், பாஜக தேசிய தலைவர்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நேரடியாக பேச அவர் விரும்புகிறார். சின்னம் மற்றும் தலைவர்கள் மீதான வழக்குகளை தேர்தலுக்கு முன்பாக நிரந்தரமாக முடிக்கவும் அதிமுகவினர் விரும்புகின்றனர். கூட்டணிக்கு முன்பாக மீண்டும் தம்பிதுரைக்கு துணை சபாநாயகர் பதவி பெறவும் விருப்பம் காட்டினர். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. எனவே, இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி வைப்பதால் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்” என்று தெரிவித்தனர்.
எனினும் இந்த சந்திப்புகள் குறித்து 2 கட்சிகள் சார்பிலும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. ஆனால், இந்த சந்திப்புக்கு முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் பேசிய காட்சிப் பதிவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “தம்பிதுரைஜிக்கு நான் உறுதி அளிக்கிறேன். 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். மது, ஊழல் என இரண்டுக்கும் முடிவு கட்டப்படும்” என்று அமித் ஷா பேசியுள்ளார்.
டெல்லி சந்திப்புக்கு முன்னதாக பாஜக – அதிமுக தலைவர்கள் சிலர் தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து பேசியுள்ளனர். இனி வெளிப்படையாக மேலும் சில சந்திப்புகளை நடத்திய பின் அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.