சியோல்,
தென்கொரியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுத்தீயின் தீவிரம் அதிகரித்து காணப்படுகிறது. இதுவரை காட்டுத்தீ பாதிப்புக்கு 24 பேர் பலியாகி உள்ளனர். 200-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீயில் எரிந்து சேதமடைந்து உள்ளன. இதனால், 27 ஆயிரம் மக்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த காட்டுத்தீ சியோன்டியுங்சான் மலை பிரதேசத்திலும் பரவியது. இதில், உன்ராம்சா என்ற ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்த கோவில் ஒன்று சேதம் அடைந்துள்ளது. இதனால், தென்கொரியாவில் கலாசார இழப்பும் ஏற்பட்டு உள்ளது.
இதேபோன்று, 7-ம் நூற்றாண்டை சேர்ந்த கவுன்சா என்ற மற்றொரு கோவிலுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டது. மதிப்புமிக்க 2 கட்டிடங்கள் உள்பட 20-க்கும் கூடுதலான கட்டிடங்களும் தீயில் எரிந்து விட்டன.
காட்டுத்தீயால் கோவில் பாதிப்புக்கு உள்ளாகும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. அந்நாட்டில் அதிபராக (பொறுப்பு) வகிக்கும் ஹான் டக்-சூ, காட்டுத்தீயால் ஏற்பட்ட தீவிர பாதிப்புகளை உறுதி செய்ததுடன், தீயை அணைக்கும் பணிகளை துரிதப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
வறட்சியான நிலையை நாடு எதிர்கொண்டு வரும் சூழலில், நடப்பு ஆண்டில் சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவையும் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
இதுவரை 244 காட்டுத்தீயை மக்கள் சந்தித்துள்ளனர். இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2.4 மடங்கு அதிகம் ஆகும். தீயை முழு அளவில் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன்பு, அது தீவிரமடைய கூடும் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.