புதுடெல்லி: உத்தர பிரதேச சிறுமியிடம் இருவர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம், பாலியல் வன்கொடுமை முயற்சி அல்ல என அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
உத்தர பிரதேச கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் லிப்ட் கொடுத்துள்ளனர். வழியில் அந்த சிறுமியை மானபங்கம் செய்த அவர்கள், சிறுமியின் ஆடையையும் அவிழ்க்க முயன்றனர். அப்போது அந்த வழியாக டிராக்டரில் வந்த இருவர் பார்த்ததால், பைக்கில் வந்த நபர்கள் தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் லிப்ட் கொடுத்த நபர்கள் மீது போக்சா சட்டம் , பாலியல் வன்கொடுமை முயற்சி என பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து குற்றவாளிகளுக்கு கீழ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து குற்றவாளிகள் தரப்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 17-ம் தேதி தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, ‘‘சிறுமியை மானபங்கம் செய்தது, ஆடையை அவிழ்க்க முயன்றது பாலியல் வன்கொடுமை முயற்சி அல்ல’’ என கூறியிருந்தார்.
இந்த கருத்து கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட நீதிபதிகள் பி.ஆர்.காவை மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாஸிக் ஆகியோர் கூறியதாவது:
மானபங்கம் செய்தது, ஆடையை கழற்றும் முயற்சி பாலியல் வன்கொடுமை முயற்சி அல்ல என தீர்ப்பளிக்கப்பட்டது மனித தன்மையற்றது. உணர்வின்றி இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள் வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு, உத்தர பிரதேச அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும். வழக்கமாக, தீப்பளிக்கப்பட்ட நிலையில் தடை விதிக்க தயங்குவோம். ஆனால், இந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள், மனிததன்மையற்ற அணுகுமுறையாக உள்ளது. அதனால் இதற்கு தடை விதிக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.