புதுடெல்லி: ஹரியானா அரசின் விடுமுறைப் பட்டியலில் இருந்து ரம்ஜான் பண்டிகை நீக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, முதல்வர் நயாப் சிங் சைனியின் பாஜக அரசால் உடனடியாக நடப்பு ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.
ஹரியானாவில் ராம்ஜான் எனும் ஈத்-உல்-பித்ர் தினம் அரசு விடுமுறையாகப் பல வருடங்களாக இருந்தது. இதை மாற்றி, அரசு விடுமுறைக்கு பதிலாக அட்டவணை-II இன் கீழ் வரையறுக்க்கப்பட்ட விடுமுறையாக ஹரியானா அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அரசிதழில் ஹரியானா அரசு இன்று வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த முடிவின் படி, இந்த விடுப்பை எடுக்க விரும்புவோர் மட்டும் அதனை எடுத்துக்கொள்ளலாம். மற்றவர்கள் அதனை விருப்ப விடுப்பாக இந்த ஆண்டு மார்ச் 29, சனிக்கிழமை, 30 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 31 ம் தேதி 2024 – 25 நிதியாண்டின் இறுதி நாளிலும் எடுத்துக் கொள்ளலாம்.
ஹரியானா மனிதவளத் துறையால் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில், விடுப்பு தொடர்பான பகுதி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் நகல், அனைத்து முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு விடுப்பு என்பது அரசாங்கத்தால் அனைத்து வகை பொதுமக்களுக்கும் வழங்கப்படும் கட்டாய விடுப்பு.
அதேபோல் வரையறுக்கப்பட்ட விடுப்பு என்பது விருப்ப விடுப்பு. இது, அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் விருப்பப்படி குறிப்பிட்ட நாட்களில் அதை எடுத்துக்கொள்ளலாம். இந்த விடுப்பை எடுக்காமலும் இருக்கலாம். கடந்த சில வருடங்களாக பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கான நெருக்கடி அதிகரித்து வருவதாகப் புகார்கள் உள்ளன. ஹரியானா அரசின் இந்த முடிவை பாஜக ஆளும் இதர மாநிலங்களும் கடைப்பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.