வெயில் வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டது. கோடையின் தொடக்கமே இப்படி என்றால், அக்னி வெயிலை எப்படிச் சமாளிப்பது என்கிற பதற்றம் வருகிறது. அதிக வியர்வை, வியர்க்குரு, கட்டிகள், அம்மை, சோர்வு, மயக்கம் என வெயில் தரும் தொல்லைகள் அநேகம். இவற்றை எப்படி சமாளிப்பது என சொல்கிறார் பொதுநல மருத்துவர் விஜயசாரதி மற்றும் இயற்கை மருத்துவர் பத்மப்ரியா.

அதிகப்படியான வெப்பத்தால் உடலில் உள்ள நீரின் அளவு குறைந்து, நீர் வறட்சிப் பிரச்னை (Dehydration) வருகிறது. நீரிழப்பு ஏற்படும்போது, உடலில் உள்ள சத்துக்களும் வெளியேறி விடும். வியர்வை வராத நபர்களுக்குக்கூட நீர்ச்சத்து, சிறுநீர் மூலமாக வெளியேறும். இதனால், மயக்கம், வயிற்றுப்போக்கு, சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படலாம். வெயிலால் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட் (Electrolyte) சமன் இல்லாமல் போகிறது. அதை ஈடுசெய்ய இளநீர் அதிகம் குடிக்கலாம். இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட், உடனடியாக உடலின் நீர்ச்சத்தை சமன்செய்யும். கூடவே, மூன்று நான்கு லிட்டர் தண்ணீர், நீர்மோர், பழங்கஞ்சி, உப்பும் சர்க்கரையும் சேர்த்த நீர் ஆகாரங்களைச் சாப்பிடலாம். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உடலை சமமாக வைத்துக்கொள்ளவும், தண்ணீரைவிட சிறந்தது எதுவும் இல்லை.
உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு, வெயில் காலத்தில் இன்னும் சூடு அதிகரிக்கும். நீர்ச்சத்து குறைவதால், வயிறு இழுத்துப் பிடித்தல், அடிவயிற்று வலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். உடலின் வெப்பத்தை முதலில் கண்கள்தான் வெளிப்படுத்தும். கண்கள் சூடாக இருப்பது போன்ற உணர்வு, எரிச்சல், சிவந்து போதல், கண்கள் பொங்குதல் போன்ற பிரச்னைகள் உருவாகும். நீர்ச்சத்துள்ள உணவுகளை நிறைய எடுத்துக்கொள்வதன் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். கண்களின் வெப்பத்தைப் போக்க, குளிர்ந்த நீரால் அடிக்கடி கண்களைக் கழுவலாம்.
தவிர, வாரத்துக்கு இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்து, அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். வயிறு, கண் பகுதிகளில் ஈரத்துணி அல்லது நீரில் நனைத்த பஞ்சை, 20 நிமிடங்கள் போட்டு, உலர விடலாம். மருதாணி இலைகளை அரைத்து, உள்ளங்கை, பாதத்தின் அடிப்பகுதியில் வைத்துக்கொள்ளலாம்.

வயதானவர்கள், இதயப் பிரச்னை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், எதிர்ப்புத் திறன் குறைந்தவர்கள் வெயிலில் போகக்கூடாது. அவசியம் எனில், அதற்குரிய பாதுகாப்புடன் செல்ல வேண்டும். உடலில் நீர் சரியான அளவில் இருந்தால்தான், ரத்த ஓட்டம் சீராக நடைபெறும். ரத்த ஓட்டம் மூளைக்குச் சரியாக செல்லாதபோது, சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, மயக்கம் வரலாம். சுய நினைவு இருப்பவர்களுக்கு, வாய் வழியாகத் திரவ உணவுகளைக் கொடுத்து எழுப்பலாம். சுயநினைவு இல்லாதவர்களை, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் நேரடியாக உடலில் படுவதைத் தவிர்ப்பதே நல்லது.
கோடையில் இந்தக் காய்ச்சல் அதிகம் தாக்கும். தண்ணீர் முலம் பரவும் நோய் என்பதால், 21 நாட்கள் வரை இதன் தீவிரம் இருக்கும். அவரவர் உடல் எதிர்ப்புத் திறனைப் பொறுத்து, காய்ச்சலின் வீரியம் மாறுபடும். வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்து, வீட்டில் தயாரித்த உணவுகளை உண்பது நல்லது. சுகாதாரமற்ற உணவு, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்த்தாலே, இந்தக் காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம்.

வெயில் காலத்தில் அம்மை நோய்கள் அதிகம் தாக்கும். குழந்தைகளுக்கு அம்மை வந்தால், அதிகம் சிரமப்படுவார்கள் என்பதால், டாக்டர் ஆலோசனைப்படி தடுப்பூசிகள் போடுவதே சிறந்தது. இளநீர், பழங்கள், காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்வதன் மூலம், நீர்ச்சத்தைச் சரியாகப் பராமரித்தாலே, அம்மை நோய்களைத் தவிர்க்கலாம்.
உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால், சருமத்தில் பருக்கள், கட்டிகள், சிவப்புத் திட்டுகள், வியர்க்குரு, தொடை இடுக்குகளில் அரிப்பு போன்றவை உருவாகின்றன. அதிகமாக வியர்வை வரும் நபர்களுக்கு, எண்ணெய்ப் பசை பிரச்னையும் இருந்தால், அவர்களுக்கு வெயில் காலப் பருக்களும் வரும். இதற்குக் கற்றாழையின் சதைப்பகுதி, தேன், வெள்ளரிக்காய் சாறு, வேப்பிலை விழுது, தேங்காய் எண்ணெய், தேங்காய் வழுக்கை விழுது போன்றவற்றை உடல் முழுவதும் பூசலாம். அரசு சித்தா மருந்தகங்களில் ‘மட் பேக்’ (Mud pack) கிடைக்கும், அதை நீரில் கலந்து, உடல் முழுவதும் தடவலாம். வயிறு, கண் பகுதிகளில் ‘மட் பேக்’ போட்டுக்கொள்ளலாம்.

அடர்ந்த நிறத்தில் சிறுநீர் கழித்தாலே, உடலில் நீரின் அளவு குறைந்துள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். சிறுநீர் கழிக்கையில் வலி, எரிச்சல் ஏற்படுவது சிறுநீர்ப் பாதைத் தொற்றின் அறிகுறி. முந்தைய இரவு ஊறவைத்த வெந்தயத்தை, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அடிவயிற்றில் ஈரத்துணியை வைத்து உலரவிடலாம். தொட்டியில் இடுப்பளவு வரை நீர் நிறைத்து 20 நிமிடங்கள் வரை உட்கார்ந்திருப்பதன் மூலமும் இந்தப் பிரச்னையை சரிசெய்யலாம்.