கத்துவா: ஜம்மு – காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் காவல்துறையைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தததாக தகவல். மேலும் காவல்துறை டிஎஸ்பி உள்பட 7 போலீஸார் காயமடைந்ததாகத் தெரிகிறது. இந்த என்கவுன்ட்டரை காவல்துறை, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் இணைந்து நடத்தியுள்ளனர்.
இந்த என்கவுன்ட்டரில் காவல்துறை தரப்பிலான உயிரிழப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் அது மறுக்கப்படவும் இல்லை. மாறாக என்கவுன்ட்டர் நிகழ்விடத்தை சோதனை செய்த பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும் என்று காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
நடந்தது என்ன? கத்துவா மாவட்டம் ராஜ்பாக் பகுதியில் ஜக்கோலே கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர், ராணுவத்தினர், மத்திய ரிசர்வ் போலீஸார் அடங்கிய சிறப்பு ஆபரேஷன் குழுவினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.
நேற்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஜக்கோலே கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை சிறப்பு ஆபரேஷன் குழுவினர் சுற்றிவளைத்தனர். இதையறிந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். காலை தொடங்கிய மோதல் மாலைவரை நீடிதத்து. இறுதியாக 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 3 காவலர்கள் உயிரிழந்ததாகவும், டிஎஸ்பி உள்பட காவல்துறையைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்ததாகவும் தெரிகிறது.
இந்த என்கவுன்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேக்கிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கத்துவாவின் சன்யால் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட அதே தீவிரவாத கும்பலைச் சேர்ந்தவர்கள்தானா இவர்களும் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை செய்து வருகிறது.
5 தீவிரவாதிகளில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் எஞ்சிய 2 தீவிரவாதிகளைத் தேடும் பணி முடுக்கிவிட்டப்பட்டுள்ளது. முன்னதாக என்கவுன்ட்டரின் போது ஆயுதங்களை வனப்பகுதியினுள் எடுத்துச் செல்ல உள்ளூர் இளைஞர்கள் சிறப்பு ஆபரேஷன்ஸ் குழுவினருக்கு உதவி செய்தது கவனம் பெற்றது.