சென்னை: “புலி மாதிரி விஜய் அமைதியாக செயல்பட்டு வரும் போது சம்பந்தமே இல்லாமல் ஒரு ஆடு வந்து தலையிடுகிறது” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தவெக பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தவுடன் தவெகவுக்கு எதிராக திமுக பெரிய கட்டமைப்பை உருவாக்கினார்கள். அதன் ஒரு பகுதியாக திமுகவின் ‘பெண்’ நிறுவனமானது ஐபேக் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர். ஐபேக் நிறுவன அதிகாரி ரிஷி முழுக்க முழுக்க பாஜகவுக்காக செயல்பட்டவர். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் எங்களுக்கும் அரசியல் தெரியும்.
70 ஆண்டுகளாக கட்சி நடத்தி வருபவர்கள் எதிர்க்கட்சிகளை எப்படி ஒடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சுற்றியுள்ள தலைவர்களை எப்படி விலைக்கு வாங்க வேண்டும். எப்படி தவெகவின் குரலை ஒடுக்க வேண்டும். பல பொய் பிரச்சாரங்களை உருவாக்க வேண்டும் என்ற கோணத்தில் செட் செய்யப்பட்டவர் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. டெல்லியில் பிரதமர் மோடி அமர்ந்து கொண்டு மற்ற மாநிலங்களில் செட் செய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் திமுக அண்ணாமலையையே செட் செய்து விட்டது
நன்றாக கவனித்தால் தெரியும், திமுகவின் பிரச்சினைகளை அவர் எப்படி திசை திருப்புவார் என்று. நமது தலைவர் விஜய் புலி மாதிரி அமைதியாக இருக்கும் போது திடீரென ஒரு ஆடு வந்து சம்பந்தமே இல்லாமல் வந்து, தொழிலை சம்பந்தப்படுத்தி பெண்ணை கேவலமாக பேசியிருக்கிறார். ஒரு பெண்ணை கேவலமாக பேசும் தலைவரை பாஜக வைத்திருக்கும் போதே தெரிந்துவிட்டது அந்த கட்சியின் நிலைமை.
எந்த தீய சக்தியை எதிர்த்து எம்ஜிஆர் கட்சி தொடங்கினாரோ அதே இடத்தில் இருந்து நாமும் தொடங்கி உள்ளோம். உட்கட்டமைப்போடு தேர்தலுக்கு தவெக தயாராகி வருகிறது. ஊழல் அமைச்சர்கள், ஊழல் குடும்பத்தை தூக்கி எறிய தயாராகி விட்டோம். இதுவரை தளபதி என்று அழைக்கப்பட்ட தலைவர் விஜய்யை இனி வெற்றி தலைவர் என உறுப்பினர்கள் அழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.