சென்னை: மும்பையைச் சேர்ந்த ஸ்டாண்ட்-அப் காமெடியன் குணால் கம்ரா, கடந்த 2021-ல் தனது வசிப்பிடத்தை விழுப்புரம் மாவட்டத்துக்கு மாற்றிவிட்டதாகவும், தனக்கு மாநிலங்களுக்கு இடையேயான முன்ஜாமீன் வழங்குமாறும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஸ்டாண்ட்-அப் காமெடியன் குணால் கம்ரா (36) வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நான் ‘புதிய பாரதம்’ என்ற எனது சமீபத்திய நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. இருந்தும் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது.
அந்தேரி கிழக்கு எம்.எல்.ஏ முர்ஜி காசி படேல் அளித்த புகாரின் பேரில் மும்பையில் உள்ள கார் காவல் நிலையத்தில் எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகி வழக்கமான முன்ஜாமீன் பெறும் வரை, எனக்கு மாநிலங்களுக்கு இடையேயான முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், கிராமப்புறங்களில் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பியதால், மும்பையிலிருந்து வெளியேறி தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் குடியேறியதாகவும், பிப்ரவரி 2021 முதல் தமிழ்நாட்டில் வசிப்பதாகவும் குணால் கம்ரா மனுவில் தெரிவித்துள்ளார்.
குணால் கம்ரா மீதான புகார் தொடர்பாக மும்பையில் உள்ள அவரது பெற்றோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதை அறிந்த குணால் கம்ரா, வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜராக அனுமதிக்குமாறு காவல் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி முன் ஆஜராக இரண்டு வார கால அவகாசம் கோரினார். இதனிடையே, மார்ச் 30-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என போலீசார் அவருக்குத் தெரிவித்துள்ளனர்.
மும்பை காவல் துறையினர் தன்னைக் கைது செய்து உடல் ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தக் கூடும் என்பதால், மும்பை உயர் நீதிமன்றம் தனக்கு முன்ஜாமின் வழங்கும் வரை, மாநிலங்களுக்கு இடையேயான முன்ஜாமீன் வழங்க குணால் கம்ரா கோரியுள்ளார்.
மேலும், ஏப்ரல் முதல் மூன்று வாரங்களுக்கு பம்பாய் உயர் நீதிமன்றம் கோடை விடுமுறையில் இருக்கும் என்பதை எடுத்துக்காட்டி, மும்பை உயர் நீதிமன்றத்திடமிருந்து வழக்கமான முன்ஜாமீன் பெறும் வரை, தனக்கு மாநிலங்களுக்கு இடையேயான முன்ஜாமீன் வழங்குமாறு மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளார்.