பெய்ஜிங்: சீனாவும் இந்தியாவும் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பம் தெரிவித்தார்.
இந்தியாவும் சீனாவும் தங்களுக்கு இடையில் ராஜதந்திர உறவுகளை கடந்த 1950-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி ஏற்படுத்திக் கொண்டன. இதன் 75-ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேற்று வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
அப்போது திரவுபதி முர்முவிடம், “சீனாவும் இந்தியாவும் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும். இந்த உறவுகள் டிராகன்-யானை (இரு நாடுகளின் அடையாள விலங்குகள்) நடன வடிவத்தை எடுக்க வேண்டும்.
அண்டை நாடுகளான சீனாவும் இந்தியாவும் அமைதியாக இணைந்து வாழ்வதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். முக்கிய சர்வதேச விவகாரங்களில் தகவல்தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் எல்லைப் பகுதிகளில் கூட்டாக செயல்பட்டு அமைதியை பாதுகாக்கவும் நான் தயாராக இருக்கிறேன்” என்று ஜி ஜின்பிங் கூறினார்.
கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக்கில் இந்திய – சீன ராணுவ வீரர்களை மோதலை தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவியது. கடந்த ஆண்டு அக்டோபரில் கிழக்கு லடாக்கின் தேப்சாங், டெம்சோக் பகுதிகளில் இந்தியாவும் சீனாவும் படைகளை குறைத்துக் கொண்டதை தொடந்து இந்த பதற்றம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இரு நாட்டு தலைவர்களும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, சீன பிரதமர் லீ கியாங் ஆகியோரும் நேற்று வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.