இந்தியா வந்து அனுபவங்களை பகிர்ந்து கொள்வேன்: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உறுதி

வாஷிங்டன்: நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் தனது தந்தையின் தாய்நாடான இந்தியாவுக்கு பயணம் செய்து தனது அனுபவங்களை இந்தியர்களுடன் பகிர்ந்துகொள்வேன் என்றார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். கடந்த ஆண்டு ஜூலையில் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் வெறும் 8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். ஆனால் எதிர்பாராத வகையில் 9 மாதங்களுக்கு மேல் அவர் அங்கு தங்க நேரிட்டது. இதையடுத்து சுனிதா, வில்மோர் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் கடந்த மார்ச் 19-ம் தேதி பத்திரமாக பூமிக்கு அழைத்து வரப்பட்டனர். மருத்துவ சிகிச்சைக்கு பின் ஓய்வில் இருந்த சுனிதா, சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் திங்கட்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். பூமிக்கு திரும்பிய பிறகு அவரது முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவாகும். அப்போது அவர் கூறியதாவது:

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் நாங்கள் இமயமலைக்கு மேல் செல்லும்போது, வில்மோர் புட்ச் அருமையான புகைப்படங்களை எடுத்துள்ளார். கிழக்கிலிருந்து மும்பை, குஜராத்தின் மேலே செல்லும்போது அழகிய கடற்கரையை கண்டோம். இரவில் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை இந்தியா ஒளிரும். இரவிலும் பகலிலும் நம்ப முடியாத வகையில் பிரம்மிக்க வைத்தது இயமலைதான்.

இந்தியா எனது தந்தையின் தாய்நாடு. இந்தியா சென்று எனது விண்வெளி அனுபவங்களை இந்தியர்களுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறேன். நிச்சயமாக இது ஒருநாள் நடக்கும். இந்தியா அற்புதமான ஜனநாயகம் கொண்ட பெரிய நாடு. விண்வெளியில் கால் பதிக்க இந்தியா நீண்ட நாள்களாக முயற்சிக்கிறது. இந்தியாவின் முயற்சிகளுக்கு நான் உதவுவேன்.

இவ்வாறு சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.

முன்னதாக விண்வெளியில் இருந்து திரும்பிய சுனிதா வில்லியம்ஸை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுனிதாவின் தந்தை தீபக் பாந்த்யா குஜராத்தின் மெஹ்சானா மாவட்டம் ஜுலாசன் கிராமத்தில் பிறந்தவர். 1958-ல் மருத்துவ மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு உர்சலின் போன்னியை மணந்து கொண்டார். இத்தம்பதிக்கு 1965-ம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸ் பிறந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.