லக்னோ: அரசியல் என்பது எனக்கு முழுநேர பணி அல்ல என்றும் உண்மையில் நான் ஒரு துறவி என்றும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளில் அமைச்சர் பதவியில் இருப்பதில்லை என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் 17-ம் தேதி 76-வது வயதில் அடியெடுத்து வைக்க உள்ளார். எனவே, நரேந்திர மோடி விரைவில் பிரதமர் பதவியிலிருந்து விலகுவார் என தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக சிவேசேனா (உத்தவ் பிரிவு) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இந்தக் கருத்தை தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அப்போது, நரேந்திர மோடி பதவி விலக உள்ளதாகவும் அதன் பிறகு நீங்கள் (யோகி) பிரதமராக பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து யோகி ஆதித்யநாத் கூறும்போது, “நான் இப்போது உத்தர பிரதேச முதல்வராக உள்ளேன். மாநில மக்கள் நலன் கருதி பாஜக எனக்கு இந்தப் பொறுப்பை வழங்கியது. அரசியல் என்பது எனக்கு முழுநேரப் பணி அல்ல. இப்போது முதல்வராக பணியாற்றுகிறேன். ஆனால், உண்மையில் நான் ஒரு துறவி. அரசியல் என்பது என்னுடைய நிரந்தர தொழில் அல்ல.
நான் பொதுமக்களில் ஒருவனாக அரசியலமைப்பு பொறுப்புகளை நிறைவேற்றுகிறேன். நான் என்னை விசேஷமானவனாக கருதவில்லை. என்னைப் பொறுத்தவரை நாடு எல்லாவற்றுக்கும் மேலானது. என் நாடு பாதுகாப்பாக இருந்தால் என் தர்மமும் பாதுகாப்பாக இருக்கும். தர்மம் பாதுகாப்பாக இருந்தால் அது மக்கள் நலனுக்கு வழிவகுக்கும்” என்றார்.
ஒழுக்கத்தை கற்க வேண்டும்
மேலும் யோகி கூறியதாவது:
உ.பி.யில் சாலைகளில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலைகள் என்பது நடப்பதற்கும் வாகனங்கள் செல்வதற்காகவும் உருவாக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இந்துக்களிடமிருந்து மத ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும். பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 66 கோடி பேர் பங்கேற்றனர். இதில் வன்முறை சம்பவமோ, பாலியல் துன்புறுத்தலோ எங்கும் நடைபெறவில்லை. இதுதான் மத ஒழுக்கம்.
அரசு சொத்துகளை அபகரிக்கும் ஊடகமாக வக்பு வாரியம் மாறிவிட்டது. எனவேதான் வக்பு திருத்த சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது காலத்தின் கட்டாயம். அதேநேரம் இந்த புதிய சட்டத்தால் முஸ்லிம்களும் பயனடைவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.