சென்னை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறை அமைவதற்கு காலம் கனியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய பாஜக அரசு, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வஃக்பு திருத்த சட்ட மசோதாவை மீண்டும் நாடாளுமன்ற அவையில் அறிமுகப்படுத்தி, அதை நிறைவேற்ற முயற்சிக்கிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் சிறுபான்மையினருக்கு எதிரான மிகமோசமான தாக்குதலாக அது அமையும்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 2026-ல் ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கே தெரியும். தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் இன்னும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அதிமுகவும் ஒரு அணியை உருவாக்கவில்லை. பாஜகவாலும் ஒரு அணியை உருவாக்க முடியவில்லை. புதிதாக கட்சி தொடங்கியுள்ள தவெக தலைவர் விஜய்யும் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததாக தெரியவில்லை.
அண்மையில் நடந்த தவெக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், தமிழகத்தில் திமுகவை தொடர்ந்து அதிமுகவோ, பாஜகவோ இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கமுடியாது. நான் தான் இரண்டாவது பெரிய கட்சி என சொல்லியிருக்கிறார். ஆக பாஜக, அதிமுக, தவெக ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே இரண்டாவது பெரிய கட்சி யார்? என்ற போட்டிதான் நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக இருக்கிறது. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற விசிகவின் கோரிக்கை 2026 தேர்தலுக்கு பிறகு நிறைவேற்றப்படுமா? என்றால் அதற்கான சூழல் இன்னும் அமையவில்லை.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறை அமைவதற்கு காலம் கனியும். திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகளில் ஒரு கட்சி இன்னும் பலவீனப்படும்போதுதான், எங்களது கோரிக்கை வலுபெறும். திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு இடையேயான நடவடிக்கைகளில் முரண்பாடு இருக்கலாம். ஆனால் அடிப்படையான கொள்கைகளில் அனைவருக்கும் ஒருமித்த பார்வை இருக்கிறது. அதேநேரம் அதிமுக, பாஜகவும் இடையே வலிந்து உருவாக்கப்படும் கூட்டணி அரசியலுக்காகவே தவிர, கொள்கை அடிப்படையில் அது பொருந்தா கூட்டணியாகும். இவ்வாறு அவர் கூறினார்.