சென்னை: மத்திய அரசை கண்டித்து தலைமைச் செயலக வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர்.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று சட்டபேரவை நிகழ்வுகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.
இந்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு ‘இஸ்லாமியர்களை நிராகரிக்காதே’ ‘இஸ்லாமியர்களை அழிக்காதே’ போன்ற கோஷங்களை எழுப்பினர்.
அப்போது திமுக எம்எல்ஏ இ.பரந்தாமன் செய்தியாளர்களிடம் கூறியாதாவது: வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து, அதை திரும்பப்பெற வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் அச்சட்டத்தை தாக்கல் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தும் விதமாக தமிழக சட்டப்பேரவையில் கடந்த 27-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
இருப்பினும் நாடாளுமன்றத்தில் பலம் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக ஜனநாயகத்தின் குரல்வளைகளை நெரித்து எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை மதிக்காமல், அவர்களது திருத்தங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல், திமுக எம்பிகள் ராசா, அப்துல்லா உறுப்பினர்களாக உள்ள கமிட்டியில் சொன்ன திருத்தங்கள் கொண்டு வர முன்வராத கமிட்டி, எதிர்ப்பு கருத்து உடையவர்களை இடைநீக்கம் செய்துள்ளது.
ஒரு மசோதவை நிறைவேற்றுவதற்கு முன்பு நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பும் போது அனைத்து கட்சி பிரதிநிதிகள் உள்ளனர், ஆனால் எதிர் கருத்து உள்ளவர்கள் இடைநீக்கம் செய்த முதல் முறையாக வரலாற்று பிழையை பாஜக செய்துள்ளது. 232 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், 288 பேர் ஆதரவு தெரிவித்ததால் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இருப்பினும் இதற்காக சட்டப்போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். அந்தவகையில் காயிதே மில்லத் காலம் முதல் எதிர்காலம் வரை என்றென்றும் சிறுபான்மை மக்கள் பக்கம் திமுக நிற்கும் என்பதை உறுயளிக்கும் விதமாக இந்த போராட்டத்தை நடத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.